கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்பியமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி சுனில் வதகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சுகவீனம் தொடர்பான தவறான மருத்துவ அறிக்கையை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.