பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு ஜெயிக் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (08) நடைபெற்ற இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
உலகிலேயே சிறந்த பலசரக்குகள் பொருட்கள் நம் நாட்டில்தான் இருந்தன. ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக, பலசரக்குகள் துறையின் பின்னடைவால், மசாலா மூலம் நமக்கு வரும் வருமானம் குறைந்துள்ளது.
ஆனால் இப்போது அது மாற வேண்டும். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையுடன், நாம் ஒரு போட்டி பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும். கடனை அடைக்க அதிக அன்னியச் செலாவணியை ஈட்ட வேண்டும். மற்றும் எமது கையிறுப்பில் சாதகமான நிலை இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
பண்டைய காலத்தில், இந்த நாட்டின் பொருளாதாரம் முக்கியமாக பலசரக்குகள் துறையைச் சார்ந்தது. நாம் பரந்த சந்தையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரசாங்கம் ஏற்கனவே தலையிட்டுள்ளது. கறுவா அபிவிருத்திக்கென தனியான திணைக்களம் அமைத்துள்ளோம்.
மேலும், நம் நாடு மிக உயர்ந்த தரமான மற்றும் சுவையான கோபியை உற்பத்தி செய்கிறது. மேலும், நம் நாட்டில் கிடைக்கும் கொகோ கொகோவின் சிறந்த வகைகளில் ஒன்றாகும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களுக்குத் தேவையான நிலத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. மேலும் தனியார் நிலங்கள் அதிகமாக உள்ளன. இந்தத் துறையை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மேலும், புதிய தொழில்நுட்பத்துடன் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும். இங்கு தனியார் துறையினரின் ஆதரவும் தேவை. பலசரக்குகள் துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மசாலா சங்கத்தில் உள்ள அனைவரும் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு தேவையான ஆதரவை வழங்க நானும் அமைச்சரும் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.