அரச ஊழியர்கள் தற்போது உட்கொள்ளும் அரிசி உள்ளிட்ட கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் என விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு இந்த யோசனையை முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது நாட்டின் விவசாயத்துறைக்கும் குறிப்பிடத்தக்க தேசிய பங்களிப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு வர்த்தக விவசாய முறைக்கு மாறுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் இரண்டு ஹெக்டேயர் நிலத்தில் விவசாயம் செய்தும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாத விவசாயிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் ஒரு ஹெக்டேயரில் நெல் பயிரிட்டு, மற்றைய ஹெக்டேயரில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் அன்னாசி போன்ற ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நெல் விவசாயத்தை மாத்திரம் நம்பியிருக்கும் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் நாளொன்றுக்கு மூன்று வேளைகளிலும் அரிசி உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரிசி மட்டுமன்றி பாண் உள்ளிட்ட அனைத்து வகையான கார்போஹைட்ரேட் உணவுகளின் தற்போதைய நுகர்வு அளவையும் மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்களை அமைச்சர் கே.டி. லால்காந்த நேற்று (11) அனுராதபுரத்தில் அமைந்துள்ள தேசிய அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
