இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது. தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்பதுடன், இதற்காக நாடு முழுவதும் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2,034 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை கம்பஹா மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81ஆயிரத்து 129 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களுக்காக 1,212 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17 இலட்சத்து 65ஆயிரத்து 351 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 1,204 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேல் மாகாணத்தின் மற்றுமொரு மாவட்டமான களுத்துறை மாவட்டத்தில் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 240 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க, 57இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதுடன், செப்டம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன் பிரகாரம் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மக்கள் மூலமும், 29 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட உள்ளனர். இதற்காக 8,888 வேட்பாளர்கள் 22 தேர்தல் மாவட்டங்களில் களமிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த மாதம் 30ஆம் திகதியும் இம்மாதம் முதலாம், 4ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. இதில் 712 ,321 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர்.
வாக்குப் பெட்டிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் இருந்து உரிய வாக்குச் சாவடிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. பலத்த பாதுகாப்புடனேயே வாக்குப் பெட்டிகள் உரிய வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளே பொதுத் தேர்தலிலும் பயன்படுத்தப்படுகிறது. மொத்தமாக 15ஆயிரம் வரையான வாக்குக் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்காளர்கள் மாலை வரை காத்திருக்காது காலை வேளையிலேயே தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கொண்டுவராதவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படாதெனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய அடையாள அட்டை, செல்லுப்படியாகும் கடவுச்சீட்டு, செல்லுப்படியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவையில் ஓய்வுபெற்றவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள மத குருமார்களுக்கான அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடனான கடிதம், விசேட தேவையுடையோருக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இதற்கு அப்பாலான எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுப்படியாகாது.
வாக்களிப்பு நிலையங்களில் தொலைபேசிகளை பயன்படுத்தல், காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தல், ஆயுதங்களை வைத்திருத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவுற்றதும் முதல் கட்டமாக தபால் மூல வாக்குகள் எண்ணப்பட உள்ளதுடன், இரவு 7.15 முதல் பிரதான வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் முதலாவது பெறுபேறை வெளியிடும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.