Tuesday, November 19, 2024

Latest Posts

இந்த நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைஅநுரகுமார அரசு தீர்க்கும் என நம்புகின்றேன் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் தெரிவிப்பு

“இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சினைகளை அநுரகுமார அரசு தீர்க்கும் என நாம் நம்புகின்றோம்.”

– இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருள்மொழிவர்மன்  தம்பிமுத்து தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்துவின் ஊடக சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது இலங்கையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசு பதவியேற்க இருக்கின்றது. அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாகப் பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேபோல் எமது ஆதரவாளர்களர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியானது 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புத்தெழுச்சி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு நான் கூற விரும்பும் விடயம் என்னவென்றால் எமது செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். தமிழர் விடுதலை கூட்டணியானது தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்தநிலையில் இருந்து முழுமையாக புத்தெழுச்சி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன்.

மட்டக்களப்பில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று எமது ஆதரவாளர்களுக்கு நான் கூறியிருக்கின்றேன். அதன் அடிப்படையில் நாங்கள் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருக்கின்றோம்.

இன்று மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல கடமைகள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை இருக்கின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மேய்ச்சல் தரை பிரச்சினை இருக்கின்றது, வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கெல்லாம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

நானும் ஒரு நிழல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது நிலைப்பாட்டை, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.