Wednesday, May 8, 2024

Latest Posts

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸார், இராணுவம் மீது குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பரவலின் பின்னணியில் அரச படையினரும் பொலிஸாரும் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக வடமாகாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினரும் பொலிஸாரும் அதிகளவில் காணப்படும் இந்த மாகாணங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தின் ஊடாக அவை இரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் மாறாக பொலிஸார் நேரடியாக அனுப்புவதை நிறுத்த வேண்டும்.”

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ்  யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் பரவ ஆரம்பித்ததாக  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“இராணுவப் புலனாய்வு பிரிவு, கடற்படைப் புலனாய்வு பிரிவு, விமானப்படை புலனாய்வு பிரிவு, பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு போன்றவை வடக்கில் இயங்குகின்றன. ஆனால் போதைப்பொருள்கள் வருகின்றன. இந்த புலனாய்வு அமைப்புகள் என்ன செய்கின்றன?”

சோதனைச் சாவடிகளை வைத்து போதைப்பொருள் விநியோகம், விற்பனை மற்றும் பாவனையை நிறுத்த முடியுமா என யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“படகுகளில் வரும் இந்திய மீனவர்களை கடற்படை கைது செய்கிறது. கேரள கஞ்சாவை தடை செய்கிறது, ஆனால் கொகெய்ன், ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போன்றவை தெற்கிலிருந்து வடக்கிற்கு ஆனையிறவு மற்றும் வவுனியா சோதனைச் சாவடிகள் ஊடாக வருகின்றன. அவை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விநியோகிக்கப்படுகின்றன.”

சுதந்திரம், உரிமை, அதிகாரம் போன்றவற்றிற்காகப் போராடத் தூண்டும் வடக்கில் உள்ள தமிழ் இளைஞர்களை மனதளவிலும், உடலளவிலும் மௌனிக்க வைக்க போதைப்பொருள் பரவல் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“புலிகள் ஆட்சிக்காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பிரச்சினை இல்லை. கடற்படை, வான்படை, இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வடக்கு  வந்த பின்னரே இவ்வாறான போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் அதிகரித்துள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை எமக்கு வழங்கினால் இவை அனைத்தும் முற்றாக ஒழிக்கப்படும்.”

இதேவேளை, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பணிப்புரையின் பேரில், யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில்  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் இந்த தினங்களில் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

“பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொதுவில் பேசப்படுகிறது. அதனால்தான் சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இருந்தால் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குத் தெரிவிக்கவும்” என இராணுவத்தின் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.