Friday, March 29, 2024

Latest Posts

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் கவனம்!

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பெறுமதி வலையமைப்புடன் இலங்கையை ஒருங்கிணைத்து அதனை கிழக்கு பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதன் மூலம் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டு முயற்சியில் (RCEP) இணைந்து கொள்வதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்திச் செயற்பாட்டின் இறுதிப் பயனாளிகளாக தனியார் துறை கைத்தொழில்கள் இருப்பதால் இதற்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்குமாறு தனியார் துறைக்கு ஜனாதிபதியின் செயலாளர் அழைப்பு விடுத்தார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வர்த்தக சபை மற்றும் கைத்தொழில் ஆலோசனைக் குழுக்களுக்கு அறிவிக்கும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் நிதி, வெளிவிவகார, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டதுடன், தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உலகளாவிய வர்த்தகம் இன்று அதன் பழமைவாத வரம்புகளுக்கு அப்பால் உலகளாவிய உற்பத்தி வலையமைப்புகளை நோக்கி நகர்ந்துள்ளது, இன்னும் இலங்கையால் அதற்கேற்றவாறு செயற்பட்டு அதன் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. விநியோகத் திறனின் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகல் விரிவாக்கம் ஆகிய இரண்டும் உள்நாட்டுப் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கு இன்றியமையாததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதோடு, முதலீட்டு வர்த்தக தொடர்புகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்திற்கு பயனளிக்கும் வகையில் பாரிய அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அரசாங்கம் இப்போது ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தடைப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிரளிக்க அமைச்சரவை ஏற்கனவே வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவை நியமித்துள்ளதோடு, இந்த உடன்படிக்கையின் இறுதியில் உலகின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சனத்தொகையில் 30% பங்கு வகிக்கும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கும் இலங்கைக்கு வாய்ப்புகள் உருவாகும்.

இங்கு உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உள்ளூர் பொருளாதாரத்தில் கடன் அல்லாத வரவுகள் மற்றும் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சந்தைகளை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக, அனைத்து சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நிறுவப்படும் சர்வதேச வர்த்தக அலுவலகம் (ITO) தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சின் செயலாளர், இந்தப் பேச்சுவார்த்தைகளை வணிக சபை மற்றும் தரப்பினருடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர செயற்பாட்டு பொறிமுறைமை முழுமையாக தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தின் திட்டத்தின்படி, உத்தேச நிறுவனப் பொறிமுறையை முறையாக நிறுவியவுடன், அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் தனியார் துறை பிரதிநிதிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், இலங்கை ஏற்றுமதிக்கான வெளிநாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவது மற்றும் தற்போதுள்ள சந்தையைப் பாதுகாப்பது தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த ஒப்பந்தங்கள், நடைமுறையில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் மற்ற வரி அல்லாத பிரச்சனைகளான ஒதுக்கீடு கட்டுப்பாடுகள், சோதனை தரநிலைகளுக்கான ஆய்வக வசதிகள், பரஸ்பர தரநிலை அங்கீகார உடன்படிக்கைகள் மற்றும் ஏற்றுமதி பொருட்களின் மீதான வரிகளை நீக்குதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், , வர்த்தக பேச்சுவார்த்தை செயல்முறை முழுவதும், தனியார் துறையுடன் வழக்கமான மற்றும் விரிவான உரையாடல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் என்பதை தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு உறுதிப்படுத்தியது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.