2024ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் எதிர்காலத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
‘‘அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முற்றிலும் எதிர்காலத்துக்கான வரவு – செலவுத் திட்டமாகும். கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தை மையப்படுத்தியே இந்த வரவு – செலவுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதில் நிதி முகாமைத்துவம் அல்லது நிதி ஒழுக்கம் பேணப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள நிதிக் கொள்கையை அடுத்த சில ஆண்டுகளுக்கு இறுக்கமாக பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
சிறப்பானதொரு வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் சிலர் மக்களை குழப்பும் விதத்தில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?.
சர்வதேச நாணய நிதியத்துடன், இணைந்து பணியாற்றுவதால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பை வரவெற்பதுடன், மிகவும் பயனுடைய பல விடயங்கள் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளன.‘‘ என்றும் அவர் கூறியுள்ளார்.