“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏன் தெளிவுபடுத்தவில்லை? இது தொடர்பில் உரிய விளக்கம் அவசியம்.”
– இவ்வாறு ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. எனினும், ஜனாதிபதி அநுரகுமாரவின் கொள்கை விளக்க உரையில் அது பற்றி ஒரு வார்த்தையேனும் கூறப்படவில்லை. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றியும் அவர் விவரிக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேர்தலுக்கு முன்னர் இந்த விடயத்தைக் குறிப்பிடவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றே கூறினர். ஆனால், தற்போது ரணிலின் வழியிலேயே அநுரகுமாரவும் செல்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக தேசிய மக்கள் சக்தியும் மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.” – என்றார்.