புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு

0
71

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, அமைச்சரிடம் தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், அச்சமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் அறிவுரை கூறினார்.

கடந்த 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில், கொடிகாமத்தை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் தனுஜன் (வயது – 23) என்ற இளைஞன் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here