போர் காலத்தில் புலிகளின் கொடியை தொட்டு அருட்தந்தையர்கள் ஆசிர்வதிக்கும்போது பேராயர் எங்கு இருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அவர் விமர்சித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அபயராக விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கத்தோலிக்க சபையின் கருத்தை கண்டிக்கின்றோம். யார் என்ன சொன்னாலும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் ஆக்குமாறு கோருகின்றோம்.
போர் காலத்தில் தலதாமாளிகைமீது விடுதலை புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் அருட்தந்தையர்கள் சிலர் புலிக்கொடியை தொட்டு ஆசிர்வாதம் வழங்கினர். மேலும் சில அருட் தந்தையர்கள் நாட்டுக்கு எதிராக ஜெனிவா செல்கின்றனர்.
அருட்தந்தையர்கள் இவ்வாறு செயற்படும்போது பேராயர் எங்கு இருந்தார்? நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தி தமது அரசியல் தேவையை பூர்த்தி செய்ய முற்படக்கூடாது. பாதுகாப்பு தலைமையகத்தை கத்தோலிக்க சபைக்குதான் கொண்டுசெல்லவேண்டும்” என தெரிவித்தார்.
“பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நியமனம் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
இந்த நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது” என்று கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே கத்தோலிக்க சபையின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக அபயராக விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
மேலும், பௌத்த பிக்குகள் சிலர் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கத்தோலிக்க சபையின் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.