2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இடைக்கால கணக்கறிக்கை மீது நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதுடன், இன்று மாலை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த போதிலும் வாக்கெடுப்பை எவரும் கோரவில்லை என்பதால் இடைக்கால கணக்கறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2600 பில்லியன் ரூபா முதல் நான்கு மாதங்களுக்கு அரச செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரசின் வருவாய் 1600 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வட்டிச் செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதன செலவுக்காக 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.