பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத் தேர்தல்?

0
93

நாடாளுமன்றத்தின் நான்காவது தவணை முடிவடைந்து புதிய அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைபெற்று வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் 13ஆம் திகதி நிறைவடையும், அதன் பிறகு ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜனவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் அவசரச் சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் முதற்கட்டமாக வெட் வரி சட்டத் திருத்தம் திங்கள்கிழமை (டிச.11) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் ஜனவரி மாத நடுப்பகுதியில் முடிவடைவதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு, பதவிக்காலம் முடிவடையும் வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதி உட்பட இரண்டு மாதங்களுக்கு மிகாமல் தொடங்கப்பட வேண்டும்.

அதன்படி, நடப்பு கூட்டத்தொடர் முடிவடைந்தால், 2024 மார்ச் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக அமையும் என ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளார். இதன் பிரகாரம் பாராளுமன்ற பொதுத் தேர்தலை வருட ஆரம்பத்தில் நடாத்தி அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என பாராளுமன்றத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

“நாம் ஏன் பிரிந்தோம்? ஒன்றிணைந்து செயற்படுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆணையைப் பெற்று அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் கவனம் செலுத்தி வருவதாகவும் அரசாங்கத்தின் உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here