குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் ஆகியோரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். .
ஷானி அபேசேகரவை வாகன விபத்து மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளினால் அண்மையில் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இது பாரதூரமான விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
அவரது உயிரைப் பாதுகாக்க முறையான பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், அந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி தேரருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் நாயக்க தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடந்த 3 வாரங்களாக புனித ஸ்தலத்தில் இருந்தபோது இராணுவத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்ட இருவர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிஹிந்தலை புனித தலத்தின் பாதுகாப்பு மற்றும் பணிகளுக்கு பொறுப்பான இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் எவருக்கும் இந்த அறியப்படாத நபர்கள் பற்றி தெரியாது என்றும், அவர்கள் இருவரும் நொச்சியாகம பகுதியில் உள்ள இராணுவ முகாமின் தளபதி அறிவுறுத்தலின் பேரில் வந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்ததாகவும் கூறினார்.
கட்சி, எதிர்கட்சி எதுவாக இருந்தாலும் தலைவரின் வாழ்க்கை தொடர்பான பொறுப்பு இருப்பதாகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை கட்சி, எதிர்கட்சி என்ற பேதமின்றி விமர்சித்தாலும் அதனை தாங்கிக் கொள்வது எமது கடமை எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.