Thursday, May 8, 2025

Latest Posts

இந்தியாவின் உதவிஎப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச்  சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

“இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.