Friday, April 4, 2025

Latest Posts

யாழ்.மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இக்காய்ச்சலினால் யாழ்.மாவட்டத்தில் 6 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நோயாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் 3 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காய்ச்சல் பரவி வரும் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படின் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் பரவக்கூடிய ஆபத்து இலக்கினரான விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் உதவியுடன் கிராம மட்ட விவசாய குழுக்கள் மூலம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று  வருகின்றன. மேலும் கடல்நீர் ஏரிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் துப்பரவுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் தடுப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை உட்கொள்ள வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்ச்pன் தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று இந்த நோய்ப் பரம்பலை ஆய்வு செய்வதற்காக யாழ். மாவட்டத்துக்கு நேற்று (நேற்றுமுன்தினம்) வருகை தந்தது. இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுடன் சில பிரதேசங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து இன்னுமோர் விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு இன்று (நேற்று) வருகை தரவுள்ளது. இவர்கள் கள நிலவரங்களை ஆய்வு செய்து இந்த நோய் பரம்பலை  கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை வழங்குவர்.

எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும், தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகவும் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட மருந்துகள் யாழ். மாவட்டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், இந்த நோய் தீவிரமாக பரவி வரும் பிரதேசங்களிலுள்ள வைத்திசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டள்ளன.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.