மீண்டும் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் இன்று காலை நிரம்பி வழியத் தொடங்கின.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தானியங்கி வெள்ள வாயில்கள் 6, இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 17,700 கனஅடி நீர் ரந்தெணியல நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், ரந்தெணிகல நீர்த்தேக்கத்தின் வெள்ள வாயில்கள் 2 இன்று காலை திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 472 கன மீட்டர் நீர் கொள்ளளவு கீழ்நிலையிலுள்ள ரந்தம்பே நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
ரந்தெணிகல நீர்த்தேக்கத்தின் ஒரு வெள்ள வாயில் 1 மீட்டர் உயரத்திற்கும், மற்றொரு வாயில் 2.5 மீட்டர் உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா, ரந்தெணியல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, மினிப்பே அணை வழியாக வெளியேறும் நீர் ஓட்டத்தின் கொள்ளளவு மாறுபடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லொக்கல் ஓயா, தியபானா ஓயா, ஹேபொல ஓயா மற்றும் உல்ஹிட்டிய நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறும் வெள்ளநீரும், பதுளு ஓயாவின் நீரும் மீண்டும் மகாவெலி ஆற்றில் இணைவதால், ஆற்றைப் பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என இலங்கை மகாவெலி அதிகார சபையின் திகன பிரதான பொறியியல் மற்றும் நீர் செயற்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
