Friday, October 18, 2024

Latest Posts

காலநிலை மாற்றத்தை தணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது!

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற அனுமதி பத்திரத்துக்கு பதிலாக சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம், இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன், பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.