Friday, December 27, 2024

Latest Posts

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு; மனோ கணேசன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு. 200 வருடங்களுக்கு முன் 1823 இல் இருந்து எங்களை இலங்கைக்கு, பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து அழைத்து வந்ததும் நீங்கள்தான். 1948 இல் எங்களை அம்போ என கைவிட்டு போனதும் நீங்கள்தான். இதை சொல்லி குற்றச்சாட்டு பத்திரிக்கை படிக்க நான் இங்கே வரவில்லை. உங்களுக்கு இந்த வரலாற்றை ஞாபகப்படுத்தவே வந்துள்ளேன். வரலாற்றை மனதில் கொண்டு, இந்த நிகழ்காலத்தில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு நீங்கள் உதவிடுங்கள், என நட்புரீதியாக உங்களை நான் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் கோருகிறேன் என இலங்கையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்றுள்ள அன்ரூ பெட்றிக்கை சந்தித்த போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன் எம்பி மற்றும் பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் எம்பி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் ஆகியோர் இடையில் கலந்துரையாடல் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரலாயத்தில் நேற்று (20) நடைபெற்றது.

பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை ஆவணத்தை கையளித்த மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வரும் போதெல்லாம், 1948 இல் இலங்கையின் வெளிநாட்டு வைப்பு, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக ஆசியாவில் அதிகமாக இருந்தது என்று சொல்லுவார். அது உண்மை. அன்று இலங்கையில் இருந்த ஒரே ஏற்றுமதி தொழில் தேயிலை இறப்பர் பெருந்தோட்ட தொழில்துறை தான். ஆகவே ரணிலின் கூற்றின் பின்னணி என்னவென்றால், அந்த அதிகூடிய வெளிநாட்டு வைப்புக்கு காரணம், எமது மக்களின் உழைப்பு, வியர்வை, இரத்தம் ஆகியவைதான் என்பதை பிரித்தானியா உணர வேண்டும்.

ஆனால், 1948 இல் சுதந்திரத்தின் பின் இலங்கை அமைந்த முதல் அரசாங்கம் தந்த பரிசு, எமது குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு ஆகியவைதான். ஆனால், இங்கேதான் பிரித்தானியாவின் பொறுப்பு தவறல் நிகழ்ந்தது. 1948 இல் இலங்கை குடியரசு ஆகவில்லை. 1972 வரை எமது நாடு டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தது. பிரித்தானியா மகாராணிதான் எங்கள் நாட்டு தலைவராக 1972 வரை இருந்தார். இங்கே அவரது பிரதிநிதி மகா தேசாதிபதி இருந்தார்.

ஆகவே பிரித்தானியா மகாராணியின் அரசாங்கத்தின் கண்களுக்கு முன்தான் இந்த உலக மகா அநீதி நிகழ்ந்து. எமது குடியுரிமையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடு கடத்திய போது பிரித்தானியா பார்த்துக்கொண்டு இருந்தது. கால்நடைகளை பகிர்ந்து கொண்டதை போன்று இந்தியாவும் எமது மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் உள்வாங்கி கொண்டது.

இதனால் எங்கள் அரசியல் அதிகாரம் இலங்கையில் பலவீனமடைந்தது. அந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் இல்லாவிட்டால் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 25 மலையக தமிழ் எம்பிக்கள் இருந்திருப்போம்.

வடகிழக்கு தமிழ் சகோதர எம்பிகளுடன் சேர்த்து இலங்கையில் 50 தமிழ் எம்பிக்களுக்கு குறையாமல் பலமாக இருந்திருப்போம். அப்படியானால், இலங்கையின் இனப்பிரச்சினை இந்தளவு மோசமடைந்து இருக்காது. இவை அனைத்துக்கும் ஆரம்பம், 1948 இல் சுதந்திரத்தின் பின் மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு ஆகியவை தான்.

இலங்கையில் இருந்து இந்தியா போன மலையக மக்களை மீண்டும் இங்கு கூட்டி வர முடியாது. அவர்கள் வரவும் மாட்டார்கள். ஆனால், நாம் பலவீனமடைந்ததன் காரணமானாக எமது இனம் இந்நாட்டில் இழந்த கல்வி, சமூக, பொருளாதார உரிமைகள் எண்ணிடலங்கா. எமது பின்தங்கிய நிலைமைக்கும் இவையே காரணம்.

ஆகவே பிரித்தானியாமுன்வந்து, எமது இனம் இந்நாட்டில் நமது இனம் இழந்த உரிமைகளை பெற்றுத்தர உதவிட வேண்டும். இது தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் தயார் என தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.