நுவரெலியா மாவட்டத்தில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து அறிக்கையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2023 பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கை தம்மிடம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், மாவட்டச் செயலகம், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணி பதிவுத் திணைக்களம் ஆகியன மாவட்டத்தில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் ஒன்றிணைந்த அறிக்கையை தயாரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தோட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ள சுகாதார நிலையங்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
“அரசு அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்னைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இம்மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளுடன் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். ஜனாதிபதி என்ற வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைத் தவிர வேறு எந்தப் பணிகளையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்காது” என்று அவர் கூறினார்.
இன்று காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, உலக முடிவு பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் திட்டம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு அறிவுறுத்தினார்.
எவ்வாறாயினும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அரசாங்க அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் தேவை. ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது.
ஹார்டன் சமவெளி இலங்கையின் மிக உயரமான இடம். எனவே, அதை அழிக்க முடியாது. ஹோர்டன் சமவெளியை பாதுகாக்க புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.
N.S