
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் இன்று (27) முற்பகல் அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய அமர்வில் 21 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மன்னார் பிரதேச சபையின் செயலாளரினால் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்ட போது, அறிக்கையை ஆட்சேபித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரேரணையை முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 2 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த தலா ஒருவருமாக மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் ஒருவரும் அடங்கலாக மொத்தம் 10 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் மன்னார் பிரதேச சபைக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.