குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் நியமனம் ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும் இருப்பதாவெல்கம கூறுகிறார்.
ஜீவன் குமாரதுங்க கட்சியின் பிரதித் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாக குமார வெல்கம குறிப்பிடுகின்றார்.
இதற்கு முன்னர் பல தடவைகள் விமுக்தி குமாரதுங்க தீவிர அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
தனது மகன் அரசியலில் இருந்து இயன்றவரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைவதற்கு தயாராக இருப்பதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.