பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான நோக்கத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் இதுவரை சந்தேகநபராக அடையாளம் காணப்படவில்லை என அவர் கூறினார்.
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் இலங்கையிலுள்ள முன்னணி நிதி நிறுவன குழுமம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பிரபல காப்புறுதி நிறுவனமொன்றின் பணிப்பாளராகவும் பதவி வகித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை(15) கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் பொரளை பொது மயானத்தில் தமது காருக்குள் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றிரவு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த மர்மமான மரணம் தொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ள விடயங்கள்?
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவபொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
“இதுவரை இந்த குற்றத்தை செய்தது யார். இதனை திட்டமிட்டுச் செய்தது யார். எந்த வகையில் இந்த குற்றம் இடம்பெற்றது என்பது தொடர்பாக வௌிக்கொணரப்படவில்லை. எனினும் விசாரணை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து பல்வேறு கோணங்களில் சந்தேகிக்கப்படும் துறைகள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரையும் சந்தேகநபராக அடையாளம் காணவில்லைகுற்றத்திற்கான காரணம் அல்லது குற்றவாளிகள் அடையாளம் காணப்படாவிட்டாலும் இந்த சம்பவம் தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் எழுந்துள்ளன.தினேஷ் ஷாப்டரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் 1.55 மணியளவில் அவர் பிளவர் வீதியில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறித்த தினம் மீண்டும் வௌிநாடு செல்லவிருந்த தினேஷ் ஷாப்டர், அரை மணித்தியாலத்தில் வீடு திரும்புவதாக தமது மனைவியிடம் கூறியிருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரயன் தோமஸ் இந்த சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றார்?
பொரளை பொது மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதிக்கச் சென்ற அவரது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான கிரிஷ் பெரேராவின் வாக்குமூலத்திற்கு அமையவே பிரயன் தோமஸ் இதனுடன் தொடர்புபடுகின்றார். பிற்பகல் 2.15 மணியளவில் தினேஷ் ஷாப்டரின் மனைவி தமது கணவருக்கு அனுப்பியுள்ள வட்ஸ்அப் செய்தியில், வீடு திரும்புவதற்கு இன்னும் நேரம் செல்லுமா என வினவப்பட்டிருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்காததால் அவர் GPS ஊடாக தொலைபேசி இருக்கும் இடத்தை ஆராய்ந்துள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி பொரளை பொது மயானத்தில் இருப்பதை கண்டறிந்த அவர் உடனடியாக கிரிஷ் பெரேராவை தொடர்புகொண்டு அறிவித்துள்ளார். பொரளை பொது மயானத்தில் இருப்பதற்கான தரவுகள் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக அந்த சந்தர்ப்பத்தில் கிரிஷ் பெரேரா, ஷாப்டரின் மனைவிக்கு அறிவித்ததாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரயன் தோமஸை அவர் சந்திப்பதற்கு சென்றிருந்தாக கிரிஷ் பெரேரா பொலிஸாரிடம் வாக்குமூலமளித்திருந்தார். எவ்வாறாயினும், தாம் வரும்வரை காத்திருப்பதாக தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 02 மணியின் பின்னரே வட்ஸ்அப் செய்தியொன்றை அனுப்பியிருந்ததாக பிரயன் தோமஸ் கூறுகின்றார். வரவேண்டிய இடம் தொடர்பாக வட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டிருந்த வட்ஸ்அப் தகவல் எழுதப்பட்ட விதத்தைக் காணும்போது அது தினேஷ் ஷாப்டரால் அனுப்பிவைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை தாம் உணர்ந்ததாகவும் பிரயன் தோமஸ் தெரிவித்தார்.
அதற்கமைய, தினேஷ் ஷாப்டரை சந்திப்பதற்கான அவசியம் இல்லை என்பதை அறிவித்து, தாம் அந்த சந்தர்ப்பத்திலேயே வட்ஸ்அப் தகவல் ஒன்றை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். தினேஷ் ஷாப்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விதம் தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்துவோம். தினேஷ் ஷாப்டரின் மனைவி வழங்கிய தகவலுக்கு அமைய பொரளை பொது மயானத்திற்கு சென்ற கிரிஷ் பெரேரா, தமது வாகனத்தை இடையில் நிறுத்தி விட்டு பொது மயானத்திற்குள் சென்றுள்ளார்.
வீதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலினால் இவ்வாறு செயற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.கிரிஷ் பெரேராவின் வாக்குமூலத்திற்கு அமைய, ஷாப்டரின் காருக்கு அருகில் செல்லும்போது அவரது கழுத்து வயரினால் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்டிருந்ததுடன் இரு கைகளும் முன்னால் இழுத்து பிளாஸ்டிக் பட்டியொன்றினால் கட்டப்பட்டிருந்தது. கழுத்து கட்டப்பட்டிருந்த வயரை அவிழ்த்து உதவி கோரி சத்தமிட்டதாக கிரிஷ் பெரேரா பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
பின்னர் தினேஷ் ஷாப்டர் சாரதி ஆசனத்தில் இருந்து பின்பக்க ஆசனத்திற்கு மாற்றப்பட்டு பொது மயான ஊழியர் ஒருவருடன் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். பிற்பகல் 3.55 மணியளவில் ஷாப்டர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்ததுடன் வைத்தியசாலை பொலிஸார் அது தொடர்பாக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
பொரளை பொது மயானத்திற்கு சென்ற கிரிஷ் பெரேராவின் தொலைபேசி, கணவரின் தொலைபேசி ஆகியவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்தாலும் பதில் கிடைக்கவில்லை என தினேஷ் ஷாப்டரின் மனைவி கூறியுள்ளார். பின்னர் கணவரின் தொலைபேசியில் வைத்தியசாலையில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் பதிலளித்து நிலைமையை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஷாப்டரின் மூக்கில் நகத்தினால் கீறப்பட்டதைப் போன்ற ஒரு கீறலும் பாதத்தில் சிறு காயமும் மாத்திரமே காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.