“காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராணுவத் தரப்பு தயக்கம் காட்டி வருகின்றது” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சு தொடர்பில் மத்திய குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பதிலளித்தார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறும் விடயங்களை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தப் பின்னடிக்கின்றார்கள்.
குறிப்பாகக் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராணுவத் தரப்பு தயக்கம் காட்டி வருகின்றது. இராணுவத்தினர் தங்களது நிலைப்பாடுகளிலிருந்து விட்டுக்கொடுக்கின்றார்கள் இல்லை.
எனினும், அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் சாதகமான நிலைப்பாடுகள் உள்ளன.
அரசியல் தீர்வை இலக்காகக் கொண்ட இந்தப் பேச்சுக்களில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை.
எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையிலான தொடர் பேச்சுக்களில் எங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்” – என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.
N.S