Sunday, November 24, 2024

Latest Posts

தமிழரசுக் கட்சி தனி வழியில் ; உடைந்தது கூட்டமைப்பு!

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது என்று சுமந்திரன் எம்.பி. கூறினார்.

சம்பந்தன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் பங்கேற்றனர்.

ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

புளொட் சார்பில் ஆர்.ராகவன் பங்கேற்றார். சுகயீனம் காரணமாகப் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல், அரசுடனான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கும், ஏனைய பங்காளிகள் (ரெலோ, புளொட்) தனிவழி செல்வதற்கும் இணக்கம் எட்டப்பட்டது என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

“சிலவேளை புளொட், ரெலோ என்பன இணைந்து போட்டியிடக்கூடும் அல்லது தனித்தனியே போட்டியிடக்கூடும். அது தொடர்பில் அந்த இரு கட்சியினரும் தீர்மானம் எடுப்பார்கள்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எவரும் போட்டியிடுவதில்லை. ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் மூன்று பங்காளிக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு சபைகளில் ஆட்சி அமைப்போம்” – என்று சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.