Sunday, January 5, 2025

Latest Posts

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்களுக்கு பணிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று (09) அறிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது 49% ஆகும்.

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களில் 21% கம்பஹா மாவட்டத்திலும்,18% கொழும்பு மாவட்டத்திலும், 7% களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.அவற்றில் 3.4% டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.

இது தவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதுடன், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் துரித டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் 6678 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 7166 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1902 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதோடு மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15,746 ஆகும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 209 டெங்கு நோயாளர்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் 155 டெங்கு நோயாளர்களுமாக வட மத்திய மாகாணத்தில் இந்த வருடம் 364 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 1481 டெங்கு நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 503 டெங்கு நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 57 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதோடு மத்திய மாகாணத்தில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2401 ஆகும். டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உள்ளது.

பதுளை மாவட்டத்தில் 445 டெங்கு நோயாளர்களும் மொனராகலை மாவட்டத்தில் 111 டெங்கு நோயாளர்களுமாக ஊவா மாகாணத்தில் 556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இங்கு ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் சப்ரகமுவ மாகாணத்தில் 1878 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இரத்தினபுரி மாவட்டத்தில் 708 டெங்கு நோயாளர்களும் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.கேகாலை மாவட்டத்தில் 1170 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இங்கு இறப்புகள் பதிவாகவில்லை.

இந்த வருடம் வடமேற்கு மாகாணத்தில் 3,458 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு குருநாகல் மாவட்டத்தில் 1069 டெங்கு நோயாளர்களும் புத்தளம் மாவட்டத்தில் 2389 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். வடமேல் மாகாணத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆகும்.

இந்த வருடம் தென் மாகாணத்தில் 1966 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். காலி மாவட்டத்தில் 918 டெங்கு நோயாளர்களும், மாத்தறையில் 536 டெங்கு நோயாளர்களும், ஹம்பாந்தோட்டையில் 512 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 108 டெங்கு நோயாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 106 டெங்கு நோயாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 55 டெங்கு நோயாளர்களுமாக கிழக்கு மாகாணத்தில் 269 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இதுவரை 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

வடமாகாணத்தில் 1326 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் 1121 டெங்கு நோயளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 பேரும் பதிவாகியுள்ளனர். வடமாகாணத்தில் இதுவரை 02 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது, ​​டெங்கு வைர ஸின் 2 மற்றும் 3 ஆம் திரிபுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.மேலும்14 வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸ் 3 ஆவது திரிபு பரவுகிறது. டெங்கு நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், டெங்கு நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் அதன் கீழ் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் என்பன நோய் தடுப்புக்காக பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ் விரிவான வேலைத்திட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக மாகாண பிரதம செயலாளர்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி,டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளங் கண்டு துப்புரவு செய்யும் பணிகள் தொடர்பில் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறிவூட்டுதல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளை பரிசோதனைக்குட்படுத்துதல் , ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டுதல், டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்ட பகுதிகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு பரவும் நுளம்பு குடம்பிகளை அழித்தல், வீடுகள் மற்றும் நிறுவனங்களை அண்டிய பகுதிகளை சுத்தமாக வைத்திருக்காதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன மூலம் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாகாண பிரதம செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சுகாதாரத் துறைகளின் தலையீடு மட்டும் போதாது என்றும், அதற்கு பொது மக்களின் ஆதரவும் தேவை என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.