திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசியப் பேரவையால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலையத்துக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சரித்திரபூர்வமாக சொல்லப்பட்டு வரும் இந்த காணியில் நான்கு அரச மரங்கள் உள்ளன. 2013ஆம் ஆண்டு அல்லது அதை அண்மித்த காலப்பகுதியளவில் தொல்லியல் திணைக்களத்தினால் அக்காணி எல்லையிடப்பட்டு அவர்களது பராமரிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் வெசாக் கொண்டாட்டத்தின் போது பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு தாய்லாந்தில் இருந்து வருகை தரும் ஒரு குழுவினரால் அங்கு பௌத்த சின்னங்கள் வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடத்தில் தமிழர் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இது அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடாகும்.
தொல்பொருள் அடையாளங்களை உரியாறு பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மாறாக தமிழர்களது பூர்வீக வரலாற்றை பௌத்த பேரினாவத வரலாறாக மாற்றியமைக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியப் பேரவை கூறியுள்ளது.
தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் திருகோணமலை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
N.S