‘அண்ணா….அண்ணா.. அக்கா..அக்கா… இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்…இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும் ….எடுங்களேன்.’ என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய குரலினை கேட்ட நிமிடங்கள்தான் நாடளாவிய ரீதியல் இவ்வாறாக வாழும் பல குடும்பங்களின் அவலக் குரலினைத் தேட வழிகோலியது.
பூக்கள் என்றால் அழகு, புதுமை மற்றும் வண்ணமயம் என பல்வேறு விதத்தில் பூக்களை ரசித்தாலும், பூக்கள் மலர்ந்து மீண்டும் மடிவதனை நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒப்பிடுவர் சான்றோர். பூ உற்பத்தியாளர்களினால் ஒரு பூவினை உற்பத்தியாக்குவதிலிருந்து இறுதியாக மரண ஊர்வலத்தில் மாலையாகச் சென்றடையும் வரை பல்வேறு தரப்பினரின் உழைப்பும் வேதனையும் உள்ளதெனக் கூறலாம். பக்தர்களை எதிர்பார்த்தும் பூக்கள் மற்றும் ஊதுபத்திப் பெட்டி வியாபாரத்தில் டுவடுவோர் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ளனர். சமூகத்தில் உள்ள பூ விற்பனையாளர்கள்ரூபவ் ஊதுபத்தி விற்பனையாளர்கள் மற்றும் சிட்டு விளக்கு விற்பனையாளர்கள் என பலதரப்பட்டோர் தாம் எதிர்கொள்ளும் பலவிதமான சவால்களை சந்தித்து வருவது குறித்தும் இவ்வாறான தொழிலில் ரூடவ்டுபடுகின்றவர்களின் பல்வேறு அனுபவப் பகிர்வுகளையும் இக்கட்டுரையூடாகப் பார்க்க முடியும். இத்தொழிலில் அதிகமாக ஈடுபடுபவர்கள்; பெண்கள் தலைமை தாங்கும் குடும்பமாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான சிறுதொழில்களின் மூலம் உழைப்பவர்களது வாழ்க்கையானது அன்றாடம் பெறும் வருமானத்திலேயே தங்கி காணப்படுகின்றது. ஓரு நாளைக்கு சராசரி வருமானம் அறுநூறு ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபாவாக கிடைக்கப்பெறுகின்றது. அதற்காக இவர்கள் முந்நூறு தொடக்கம் ஐந்நூறு ரூபா வரைக்கும் செலவு செய்கின்றனர். இவ்வாறு பெறப்படும் வருமானத்திலேயே தங்களுடைய கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு போன்றவற்றிற்கும் செலவிட நேரிடுகிறது.
பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்ற இயற்கை மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றனர். பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும் தமது திருமண நிகழ்வுகளை நிறைவேற்ற மலர் மாலைகள் மற்றும் பூச்செண்டுகளை பயன்படுத்துகின்றனர். வாழை மரத்தின் உலர்ந்த பகுதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வகையான பூக்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. (தமிழில் ‘நார்’ என்று அழைக்கப்படுகிறது) இதைப் பயன்படுத்துவதற்கான காரணம் அதன் வலிமை மற்றும் நீடித்த திறன் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், தற்போது அது கயிறு மூலம் செய்யும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டில் மாலைகளைப் பயன்படுத்துவது காலங்காலமாக இருந்துவரும் ஒர் வழக்கமாகும்.
புதிய மலர்களால் மாலைகள் செய்வது இன்று நகரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பொதுவான
காட்சியாக உள்ளது. நமது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்யும் அரிய
தொழிலே இதுவாகும். வெகு சிலரே மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டாலும் மேல்
மாகாணத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
இத்தொழிலை நம்பி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் முன்னணி மாலை தயாரிப்பாளர் ஒருவர், இந்தத் தொழிலுக்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு எனத் தெரிவிக்கின்றார். நம் வரலாற்றின்படி நாட்டை ஆண்ட புகழ்பெற்ற மன்னர்களின் ராணிகள் கூட கிராமத்துப் பெண்களால் செய்யப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு அழகான கிராமத்துப் பெண் தன் பெற்றோருக்குப் பூக்களைப் பறிக்கவும் மாலைகளைச் செய்யவும் உதவினாள் என்று புராணக்கதை கூறுகிறது. அசோகமாலா என்று அழைக்கப்படும் இக் கிராமத்துப் பெண் பின்னர் இளவரசர் சாலியாவை மணந்தார் என்பதும் வரலாறு.
1505 இல் போர்த்துகீசரின் படையெடுப்பிற்குப் பின்னர் காலனித்துவக் காலத்தில் கூட, கிராமத்துப் பெண்மணி காட்டுப் பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றுள்ளார் என்பதையும் வரலாறு வெளிப்படுத்துகிறது. டச்சு மற்றும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் தங்கள் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மாலைகளைத் தேடி கிராமங்களுக்குச் சென்றனர். அரசர்கள் மட்டுமின்றி அவர்களின் மனைவியர்களும் மாலைகள் செய்யும் கலையில் ஈர்க்கப்பட்டனர். தற்போதும் கூட இந்துக் கோவில்கள், பௌத்த விகாரைகளிளும் மற்றும் கிருஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் மாலைகள் தயாரிக்கும் தொழில் பொதுவான காட்சியாகக் காணப்பபடுகின்றது.
பூக்களை மாலைகளாக்கி விற்பனை செய்கின்றவர்களையும் ஊது பத்திகள் மற்றும் சிட்டுவிளக்குகள் விற்பனையாளர்கள் பலரை சில மாவட்டங்களில் சந்திக்க நேரிட்டது. கொழும்பில் நான்கு தசாப்தத்திற்கு மேலாக பூ வியாபாரத்தில் ஈடுபடும் ராஜா என்பவர் தனது வியாபாரம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தார். பிச்சமல், மல்லிகை பூ, காட்டுமல்லிகை, செவ்வந்திப் பூ, ரோசப் பூ போன்ற பூக்களினால் நாம் மாலைகள் செய்து வியாபாரம் செய்கிறோம். தற்போது இவ்வியாபாரமானது நன்றாக நடைபெற வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காலங்களில் எமது தொழிலை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கினோம் எனினும் தொழிலை கைவிடவில்லை.
இத் தொழிலினை கிரமமாக செய்வதனால் குறிப்பிட்டளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும் பருவகாலங்களில் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட முடியும் ஆனால் தற்போது பூக்களின் விலை அதிகமாக காணப்படுவதால் அதனை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி பூக்கள் உற்பத்திகளில் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உரிய முறையில் மாலைகள் மற்றும் பூ சார் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாததனால் பூ வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என செவ்வி வழங்கினார்.
களுத்துறை மாவட்டத்தினை பொருத்தவரையில் அதிக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், களுத்துறை போதி விகாரையினை மையப்படுத்தி அங்கு வருகின்ற பக்தர்களின் தேவைகள் கருதி தாமரை மொட்டு தாமரைப் பூ சிட்டு விளக்குகள் ஊதுபத்திப் பெட்டிகள் போன்றவற்றினை விற்பனை செய்து வருகின்றனர்.
‘இன்றைய நாள் ஒரு பூரண பௌர்ணமி தினமாகும் களுத்துறை போதி விகாரைக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்ற நாளாகும் எனப் பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் காத்திருக்கும் பெண்தான் வருணி இமேஸா’. களுத்துறை புண்ணிய பூமியில் வாழ்பவர் இவர் பிலியந்தலை தம்பே பகுதியைச் சேர்ந்த வருணி இமேஸா என்ற 31 வயதுடைய பெண். தனது மடியில் இரண்டரை வயது குழந்தை ஒன்றும் உள்ளது. பூஜை செய்யப் பயன்படும் சிட்டு விளக்குகளை விற்கிறார். தமது வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை ஈட்டிக்கொள்ள வெயில் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்கின்றார். சிட்டுவிளக்கின் திரியினை வாங்குமாறு பக்தர்களிடம் கேட்கின்றார்.
‘அவர்கள் இந்தச் சிட்டுவிளக்குகளுக்கான திரி துணியினை செய்யவில்லை’ மாறாக வேறு யாரோ செய்கிறார்கள். அவரிடமிருந்து வாங்கி பத்து ரூபா இலாபத்தில் விற்கிறோம் எனக் கூறும் போதே சாலையின் மறுபக்கத்திலிருந்து வருணியின் கணவர் தமது நிலை பற்றி கூறத்தொடங்கினார் ‘தச்சு வேலை கூலி வேலைகளை பொருளாதார நெருக்கடியாலும் மற்றும் கடந்த காலங்களில் ஏற்பபட்ட பெருந்தொற்றான கொரோணாவினாலும் தொழிலினை இழந்து குழந்தைகளுடன் வீதிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபட நேரிட்டது. தினமும் இங்கு வருவதில்லை. வார இறுதி நாட்கள் அல்லது விசேட நாட்கள் மற்றும் குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் மட்டும் இங்கு வருவார்கள்’ என்கிறார்.
இவரது கணவர் தச்சு தொழிலாளி ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அவரது தொழில் தோல்வியடைந்தமையினால் இந் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தொழிலை இழந்ததால் கணவருடன்
சேர்ந்து பூ மற்றும் சிட்டு விளக்கிற்கான திரி துணி விற்கும் தொழிலுக்கு திரும்பியுள்ளார். ஒரு வேளை உணவைத் தவிர வேறு எந்த உணவையும் குழந்தைகளுக்கு வழங்க முடியாத வறுமை நிலையில் தாங்களும் குழந்தைகளும் வாழ வேண்டும் என்று முடிவு செய்த வருணியும் கணவரும் கடந்த சில மாத காலமாக இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இலங்கையை ஆசியாவின் அதிசய நாடாக மாற்றுவோம் என்று தலைவர்கள் கூறிய நாடு, குழந்தைகளின் போசாக்கின்மையில் ஆசியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் போது வருணி போன்ற தொழிலில் ஈடுபடுகின்வர்களின் குழந்தைகளை நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று பிழைப்பு நடத்துவது என்பது விந்தையல்ல.
‘நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறேன், அதுவும் போதி விகாரையிலிருந்து உணவுப் பொதி பெறப்பட்டால் மாத்திரம்தான’; என சாமலி வசந்த குமாரியின் அவலக் குரலும் கதைக்கு வலு சேர்த்துக் கொண்டே செல்கின்றது.
‘என் பெயர் சாமலி வசந்தகுமாரி. என் கணவர் தற்போது உயிருடன் இல்லை. எனக்கு நான்கு குழந்தைகள். ‘மற்றவர்கள் திருமணமானவர்கள்’. இந்தப் பெண் குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது, இந்த வருமானத்தில் வாழ முடியுமா? எனக்கு சொந்த வீடு கூட இல்லை. வருமானமும் வழக்கம் போல் இல்லை. வாழ்க்கை வாழ கடினமாகவே உள்ளது’ என்கிறார் அவர்.
அதே இடத்தில் பூக்கள் விற்பனையில் ஈடுபடும் மனோகரி என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், ‘நான் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன். களுத்துறை போதிக்கு அருகிலுள்ள பனாபிட்டிய பிரதேசத்தில் இருந்து வருகிறேன், எனது குழந்தைகளுடன் பக்தர்களிடம் உதவி கோரி பிழைப்பு நடத்துகிறேன். இந்தக் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள், இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயது, நான் அவர்களின் வாழ்க்கைக்காக பல எதிர்பார்ப்புக்களுடன் வாழ்கின்றேன். எனக்குக் கணவர் இல்லை. என் அம்மா மற்றும் அப்பாவுடன் வசிக்கிறேன். மூத்த குழந்தைக்கு 13 வயது. பிரதேச செயலகம் எங்களுக்கு உதவி செய்கிறது. அதுவும் நான்கு பிள்ளைகளின் படிப்புக்கு போதாது. அதனாலேதான் சனி, ஞாயிறு தினங்களில் போதிக்கு வருகிறேன்’ என்கிறார்.
இலங்கையின் மிக பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலினை மையமாக வைத்து பல வருடகாலமாக பூ அலங்காரத் தொழிலில் ஈடுபடும் சிறி கோணஸ்வரன் தனது அணுபவப்பகிர்வினை பின்வருமாறு தெரிவித்தார். ‘நான் விரும்பி செய்கின்ற தொழில் திருமணமாலைகள், பூ அலங்கார மாலைகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான பூக்கள் செய்வதாகும். இத் தொழிலினை தற்போது செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தற்பேது காணப்படும் பொருளாதார நெருக்கடியானது எமது தொழில்களில் பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் பக்தர்களின் வரவுகள் மிகக் குறைவாக காணபப்பட்டன. தற்போது உற்பத்தி செலவுகள் மூன்று மடங்காகக் காணப்படுகின்றது. இதனை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடும்போது போதியளவு வருமானத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. இதற்காக பூக்கள் தேவைப்படும் போது புத்தளம் மற்றும் மலையகத்தில் அறுவடை செய்த பூக்களை கொள்வனவு செய்ய நேரிடும். அத்தருணத்தில் அதிகமான உற்பத்திச் செலவு ஏற்படும். இதனை வியாபாரம் செய்வதில் நாம் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகின்றோம்’ எனக் கூறுகிறார்.
மலையகத்திலும் பொருளாதார நெருக்கடியானது பூக்களினை மையமாக வைத்து தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரத்தில் பாதிப்பேற்படுத்தியுள்ளது. இலங்கையில் உரப் பற்றாக்குறையால் பூங்கொத்துக்கள், மலர் வலையங்கள் மற்றும் மாலைகள் இப்போது உயர் விலையில் விற்கப்படுகின்றன. அலங்கார மற்றும் அலங்கார பூக்களின் விற்பனை அழிந்து வருகிறது. அதிகம் விரும்பப்படும் ரோஜாப் பூவானது முன்னர் 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தங்களுக்கு பூங்கொத்துக்கள் செய்யக் கூட பூக்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூ விற்பனையாளர் சீதா தெரிவிக்கையில், முன்னர் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மலர்வலையமானது தற்போது 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், மலர் வளையத்திற்கு முன்னர் 500 பூக்கள் வரை பயன்படுத்துவதாகவும் தற்போது அது 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை நுவரெலியாவில் தற்போது பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு உரப் பற்றாக்குறையே பிரதான காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் மலர்க் கிராமம் என அழைக்கப்படும் கெப்பெட்டிப்பொல, வெலிமடை மற்றும் ஊவா-பரணகம ஆகிய பிரதேசங்களில் மலர்களின் தரத்துக்கு பொருந்தாத காரணத்தினால் பூக்களின் அறுவடைகள் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். குமாரி ரத்நாயக்க கூறும்போது ‘பூ வியாபாரம் என்பது பெண்களுக்கு ஒரு சக்தி மிக்க பொருளாதார உருவாக்கத்திற்கான ஒரு தொழிலாகும். எனவே நாங்கள் இதனை விரும்பி செய்கின்றோம். இதனூடாகவே எங்களுடைய பொருளாதாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்’ எனத் தெரிவிக்கின்றார்.
இது போன்று பூ உற்பத்தியாளர் விமலாவதி கூறுகையில் ‘நாங்கள் பூ வளர்ப்பில் ஈடுபடுகின்ற பொழுது நாம் பல்வேறு அனுபவங்களைப் பெற்று இருக்கின்றோம். இந்த அனுபவங்களூடாக எதிர்காலத்தில் சிறந்ததொரு பொருளாதார நிலையினை அடைவோம் என எதிர்பார்க்கின்றோம்’ என்கிறார்.
‘நாம் பூக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு பூக்களினை வியாபாரம் செய்து வருகின்றோம். மாதத்திற்கு தேரிய வருமானமாக 40 தொடக்கம் 50, 000 வரை பெற்றுக் கொள்கின்றோம. ஆகவே எனக்கு இந்த பொருளாதார நெருக்கடியின் போது பாரிய சவாலினை முகங்கொடுக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. எனினும் எதிர்காலத்தில் அரசு எமக்கு மானிய அடிப்படையில் உதவி புரிந்தால் எமது பொருளாதாரத்தில் ஒரு சிறந்த நிலையை அடைவோம்’ என எதிர்பார்ப்பதாகவும் பூ உற்பத்தியாளரும், விற்பனையாளருமான குசும் திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையிலும் பொருளாதார நெருக்கடியானது சிட்டு விளக்கு செய்பவர்களையும் மற்றும் பூமாலைகள் தயாரிப்பில் ஈடுபடுகின்றவர்களுக்கு பாரிய சவாலாக காணப்படுகிறது. சிட்டு விளக்குகள் தயாரிக்கின்ற போதிலும் அதனை உரிய விலைக்கு விற்க முடியாமல் மற்றும் மூலதனத்திற்கு களிமண்ணை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய ஒரு நிலை காணப்பட்டுள்ளதாகவும் இதனால் சிறிதளவில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த வியாபாரமானது பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சிட்டு விளக்கு செய்யும் பரமானந்தன் புஷ்பலதா தெரிவித்தார்.
அத்தோடு களிமண்ணை பயன்படுத்தி சிட்டு விளக்கு செய்யும் தொழிலில் ஈடுபடுகின்ற சாந்தினியின் கணவர் குகன் தெரிவிக்கும்போது ‘தனது குழந்தைக்கு பால்மா மற்றும் சத்துணவு பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மற்றும் தம்மால் மட்பாண்டப் பொருட்கள் ஏதும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமது பொருளாதாரமானது நலிவுற்று காணப்படுவதனால் அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு பாரிய சவால்களை முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது’ எனக் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூக்கட்டும் தொழிலில் ஈடுபடும் கௌதமன் புருசோத்மன் தெரிவிக்கையில் ‘காட்டுமல்லி, ரோஜா, கிருசாந்தி போன்ற உள்ளூர்ப் பூக்களையும் மற்றும் தேவை ஏற்படின் முன்பதிவுகள் செய்து வெளி மாவட்டத்தில் உள்ள பூக்களையும் பெற்று பூக்கட்டி வியாபாரத்தில் ஈடுபட்டோம். எனினும் கடந்த காலங்களில் ஏற்பட்ட உரப்பிரச்சினைகள் மற்றும் வெளியூர் பூக்களை மட்டக்களப்பிற்கு எடுத்துவரும் போது போக்குவரத்திற்காக அதிக பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணங்கள், இறந்த வீடுகளுக்காகவும், மலர்வளையங்கள் செய்து மற்றும் கோவிலுக்காவும் பூக்கள்; கட்டி வியாபாரம் செய்தோம். இதற்காக ஒரு பை பூக்களினை அதிகபட்ச விலையாக 6000 ரூபாவிற்கு மார்கழி மாதத்தில் கொள்வனவு செய்துள்ளோம். அனால் அதனை மலர் மாலையாக செய்து விற்பனையில் ஈடுபடும்போது இலாபமீட்ட முடியவில்லை’. என்கிறார்.
பொருளாதார நெருக்கடியின் போது நுவரெலியா மாவட்ட பூக்கள் வளர்ப்பாளர்கள் சங்கமானது தமது வியாபார நடவடிக்கையினை திறம்பட செய்தனர் என்று கூறமுடியும். பல ஏக்கர் கணக்கில் உற்பத்தி செய்யப்பட்ட பூக்களினை பாதுகாப்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள பூ விற்பனையாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதற்காக புத்தம் புதிய முறையினை அறிமுகப்படுத்தி அறுவடையில் ஈடுபடுதல் மற்றும் பூக் கட்டும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
பூக்கள் விற்பனையில் ஈடுபடும் கிழக்கு மாகாண தொழிலாளிகளுக்கான உரிய சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கும் வீட்டுத் தோட்டமாக பூக்களினை உற்பத்தி செய்யும் முறை தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்பாண்ட தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கிராமிய ரீதியாக பயிற்சி வழங்கி மேலும் அவர்களுக்கான தொழில் வழிகாட்டல்களையும் வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யஹம்பத் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் ‘நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான பிரதான நோக்கமாக காணப்படுவது எமது நாட்டில் காணப்படும் பூந்தோட்டங்களே ஆகும். பூ உற்பத்தியாளர்கள் தமது ஜீவனோபாயத்தினை மேம்படுத்துவதற்காக நுவரெலியா, பதுளை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் பூ வளர்ப்புக்களில் ஈடுபடுகின்றனர். பூ உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஏனைய மாவட்டங்களில் பூக்களைப் பெற்று விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களுக்கு குறித்த இலாபத்தினை ஈட்ட முடியவில்லை. கடந்த கொரோனா காலங்களில் இவர்களுடைய தொழில் முற்றாக பாதிக்கப்பட்டது. சில பிரதேசங்களில் பூக்களை விற்க முடியாத சூழ்நிலையில் அழுகிப் போயிருந்த நிலையும் காணப்பட்டது. இதனால் பூ உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது என்பதனை நாம் அறிவோம். எனினும் தற்போது ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையினை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. இதனால் நாடு விரைவில் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கின்றேன். பூ உற்பத்தியாளர்களின் பூக்களுக்கான உரிய சந்தை வாய்ப்பினை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும். அது மட்டுமல்லாமல் உள்ளூர்ப் பூக்கள் உற்பத்திக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு உற்பத்தியினை விஸ்தரித்து வெளிநாடுகளுக்கு பூக்களினை ஏற்றுமதி செய்யவும் எதிர்காலத்தில் நாம் திட்டமிட்டுள்ளோம். ஏனைய நாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்வதற்காக நாம் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கின்ற பொழுது இது தொடர்பாக விரிவாக கலந்தாலோசித்து வருகின்றோம். உலகில் பிளாஸ்டிக் பூக்களின் பாவனைகளை முற்றாக தவிர்த்து நடைபெறும் நிகழ்வுகளில் இயற்கையான பூக்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பூ உற்பத்திகளை குறைக்க எடுக்கும் ஒரு நடவடிக்கையாக இது காணப்படும் என அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பூ உற்பத்தி தொழிலானது ஒரு சிறு தொழில் என்பதனால் இதற்காக தேசிய
ரீதியில் முறையானதொரு தொழிற்சங்கம் இல்லை. ஆனாலும் இவர்களும் தமது
ஜீவனோபயத்தினை மேற்கொள்வதற்காக தொழில் புரிகின்றவர்கள். காலத்திற்கு
காலம் மாறும் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பூ வியாபாரிகளின்
வாழ்வாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதே நிதர்சனம். சூழலினை
அழகுபடுத்துவதில் பூக்கள் இன்றியமையாதவை. அதுபோல் பூந்தோட்டம் மற்றும் பூ
விற்பனையாளர்களும் மிக முக்கியமான பணியினை நாட்டிற்கு மேற்கொள்கின்றனர்.
இவர்களுக்கும் நிரந்தர சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவது அரசின் கடமைகளில் ஒன்றாகும்
என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
(கட்டுரை – ஆஷிக் வடூட்)