வவுனியா வடக்கு நெடுங்கேகேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல்சமளங்குளம் தமிழர் பகுதியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு விகாரை திறக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டுவரை தமிழர்கள் வாழ்ந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்ததால் சிங்கள மயமாகிவரும் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.
அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று இன்று திறப்புவிழா இடம்பெறுவதோடு அநுராதபுரத்தில் இருந்தும் பெருமளவு பௌத்த துறவிகள் பாத யாத்திரை வருகின்றனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலையில் உள்ள
தொல்லியல் இடத்தில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி இராணுவத்தினரின் துணையுடன் விகாரை அமைத்த கல்கமுவ சந்தபோதி தேரரே தற்போது
வெடிவைச்சகல் பகுதியில் புதிய விகாரையினையும் அமைத்துள்ளார்.
இந்த விகாரை அமைக்கப்பட்ட பகுதி அருகே இருந்த இரு குளங்களை பாரிய அளவில் புனரமைத்து அப் பகுதியில் இரகசிய சிங்கள மயமாக்கலை மேற்கொண்ட போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கம் அப்பகுதிக்குச் சென்று விடயத்தை வெளிக்கொணர்ந்தபோது அநுராதபுரம் மாவட்ட உத்தியோகத்தர்கள் இரகசியமாக அப்பகுதியில் பணியாற்றியமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு சர்ச்சையில் காணப்பட்ட இடத்தில் தற்போது 462 சிங்கள குடும்பங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.