Sunday, November 24, 2024

Latest Posts

வடக்கு வீடமைப்பு திட்டத்தின் அவல நிலை! பல வீடுகள் அநாதரவான நிலையில்!

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 200 குடும்பங்கள் வாழ்வதற்கு நிலமின்றியும் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் வாழ்விடமின்றியும் உள்ள சூழலில் 900இற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வெறுமையான நிலைமையில் இன்னமும் காணப்படுவதாக அரசியல், சமூக செயற்பாட்டாளரான துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

குறிப்பாக மாங்குளத்தில்  நிர்மாணிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான வீடுகள்கூட இன்றுவரை  வெறுமையாகவே காணப்படுகின்றது. அவற்றை முகாமை செய்வதில் அரச அதிகாரிகள் கடுமையான சவாலுக்கு உட்படுள்ளதாகவும்  குறிப்பிடும் அவர், அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடல் காரணமாகவே நிதி வீணடிக்கப்பட்டு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்னமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வாழ்விட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் அரச நிர்வாக இயந்திரத்தின் தவறான தேர்வுகள் காரணமாகவும், பொருத்தமற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்கள் காரணமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மக்கள் குடியேறாது வெறுமையாக அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகின்றது.

போரினால் அதிகம் பாதித்த மாகாணம் என்ற வகையில் வடக்கு மாகாணத்திற்கு சர்வதேச நிறுவனங்களும், அரசாங்கமும் வீட்டுத் திட்டங்களுக்கான பல ஆயிரம் மில்லியனை செலவிட்ட போதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தன்மை, முறையற்ற திட்டமிடல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

போரின் பின்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக பல நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் முன்வந்தன. இதற்கான பயனாளிகளை அரச நிர்வாக இயந்திரங்களே தெரிவு செய்தன. இதில் முல்லைத்தீவில் போரிற்குப் பின்னர் அமைக்கப்பட்ட 24,572 வீடுகளில் 937வீடுகளில் உரிமையாளர்களை காணவில்லை என்பதோடு அந்த வீடுகளில் எவருமே வசிக்காத நிலைமையும் காணப்படுகின்றது.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு அமைவாக வழங்கப்பட்ட பதிலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 47 ஆயிரத்து 22 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் போரிற்குப் பின்னர் இன்றுவரையில் 24 ஆயிரத்து 572 வீடுகள் உதவித் திட்டத்தின் கீழ்  வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வழங்கப்பட்ட  வீடுகளில் 937 வீடுகள் மக்கள் வசிக்காதபோதும் இதே மாவட்டத்தில் இன்னும் 6 ஆயிரம் குடும்பங்கள் வீடு இன்றியே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக வெறுமையாக காணப்படும் 937வீடுகளில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினில் 318 வீடுகளிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவினில் 204 வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவினில் 99 வீடுகளும் உள்ளதோடு வெலிஓயாவில் 172 வீடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களுக்காக 24ஆயிரத்து 572 வீடுகளில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  6ஆயிரத்து 756 வீடுகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  7  ஆயிரத்து 612 வீடுகளும் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  3 ஆயிரத்து 756  வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதோடு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  2  ஆயிரத்து 245  வீடுகளும் , மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  ஆயிரத்து 723  வீடுகளும் வழங்கப்பட்டுள்ள அதேநேரம் வெலிஒயா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்  2  ஆயிரத்து 680 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் உள்ள மக்கள் வசிக்காத வீடுகள் தொடர்பில் மாவட்ட பதில் அரச அதிபரான க.கனகேஸ்வரன் குறிப்பிடுகையில், ‘மாங்குளம் அரச உத்தியோகத்தர் வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளின் பிரச்சினைக்கு ஓரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஏனையவை தொடர்பிலும் முயற்சிக்கப்படுகின்றது’ என்றார்.

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் போரிற்குப் பின்னர் 13 ஆயிரத்து 580 வீடுகள் வழங்கப்பட்டபோதும் இதில் 867 வீடுகளின் உரிமையாளர்களைக் காணவில்லை. மன்னார் மாவட்டத்தில் முசலி மற்றும் மன்னார் நகரின் மத்தியிலும் இவ்வாறான நிலைமைகள் அதிகமாகக் காணப்பட்டாலும் நகரின் மத்தியில் உள்ள வீடுகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக நிதி பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே உள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், நகரத்தில் உள்ள வெறுமையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான முறையான பின்பற்றல் இடம்பெறவில்லை என்றும், எந்த நிறுவனங்களும் நேரடியாக அவ்விதமான நிர்மாணங்களுக்கு நிதி அளிக்க முடியாது என்றும், திறைசேரி ஊடாகவே அச்செயற்பாடுகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் அரச அதிகாரிகள், இதன் காரணமாகவே பயனற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மன்னார் மாவட்ட அரச அதிபரான திருமதி ஸ்ரான்லி டீமெல் கூறுகையில், ‘கடந்த காலத்தில் வீட்டுத் திட்டங்களைப் பெற்றவர்கள் தொழில் வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட நடவடிக்கைகளிற்காக பிற இடங்களில் வாழும் நிலையில் அதனை அரச சுற்று நிரூபங்களிற்கு ஏற்ப கையேற்பதிலும் பிரச்சினைகள் உள்ளன. அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது. ஏனெனில் மக்கள் வசிக்காத வீடுகள் என்ற அடிப்படையில் அரச உடைமை ஆக்கப்படும் என்ற முன் அறிவிப்பை உரிய வீடுகளில் காட்சிப்படுத்தியதும் சில நாட்களுக்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு விளம்பரப்படுத்தியும் வராத வீடுகள் தொடர்பில் ஏதும் சட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியுமா எனவும் ஆராயப்பட்டது. அதிலும் ஒரு நெருக்கடிகள் உள்ளன. அரச நிதியில் வீடு அமைக்கப்பட்டிருப்பினும் அவர்களது சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளே அதிகம் உள்ளன. இவற்றின் காரணமாகவே இவை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை’ என்றார்.

இதேநேரம், வவுனியாவில் 317 வீடுகளும் கிளிநொச்சியில் 161 வீடுகளும் வெறுமையாகவே உள்ளன. அவை தொடர்பில் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மாவட்ட நிருவாகம் முன்னெடுக்கவில்லை. இவ்வாறான நிலைமைகள் நீடிக்கின்ற அதேதேநேரம், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது; 5ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான தெரிவுகள் வடக்கில் இடம்பெற்றன. குறித்த ஐயாயிரம் வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 50ஆயிரம் ரூபா வீதம் முதற்பணம் வழங்கப்பட்ட நிலையில் பயனாளிகள் அத்திவாரத்தினை போட்டுள்ளனர். எனினும், அதற்கு அப்பால் எவ்விதமான நிதியும் வழங்கப்படவில்லை. இதனால் குறித்த வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான எஞ்சிய தொகையை வழங்குவது தொடர்பில் சிக்கலான நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

விசேடமாக, முறையான அமைச்சரவை அனுமதி, திறைசேரி அனுமதிகளின்றி ‘அரசியல் ஆதாயத்துக்காக’ முன்னெடுக்கப்பட்ட திட்டமாக ஐயாயிரம் வீட்டுத்திட்டம் காணப்படுவதால் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றும் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு முறையாற்ற தெரிவுகள் மற்றும் முகாமை காரணமாக அரச , நன்கொடை நிதிகள் முற்றாக வீணடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.