காத்தான்குடி வலயக்கல்வி பணிமனையில் இருந்து தூரப்பிரதேச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் கலாவுதீனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வந்துள்ளார்.
அதன்படி அதிபர் கலாவுதீனின் வயதை அடிப்படையாகக் கொண்டும் அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் அவருடைய கல்வித் தரத்திற்கு ஏற்ப அதிபர் பதிவில் இடமாற்றம் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் இடம்மாற்ற சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திசாநாயக்கவிற்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
காத்தான்குடி வலயக் கல்வி பணிமனை பனிப்பாளர் பதவியில் வெற்றிடம் காணப்பட்டதால் அந்த இடத்திற்கு நிர்வாக சேவை தரம் மூன்றை பூர்த்தி செய்த ஒருவர் வரும்வரை பதில் வலய கல்வி பணிப்பாளராக அதிபர் சேவை தரம் ஒன்றில் இருக்கும் கலாவுதீன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு நிர்வாக சேவை தரம் மூன்றை பூர்த்தி செய்த மொஹமட் ஹக்கீம் என்பவர் நியமிக்கப்பட்டதால் பதில் வலயக் கல்வி பணிப்பாளராக இருந்த கலாவுதீன் பாடசாலை ஒன்றின் அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த விடயத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்ட சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி செயலாளர் ஆகியோரின் அரசியல் பழிவாங்கல் இதுவென விமர்சித்ததோடு கிழக்கு மாகாண ஆளுநரை தகாத முறையில் விமர்சித்ததுடன் கிழக்கு மாகாண கல்வி செயலாளரை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதாகவும் அவரை வீதியில் இறங்கி நடக்கவிடாமல் செய்வதாகவும் சண்டித்தனம் பேசியிருந்தார்.
அவரது இந்த கருத்திற்கு அரச அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண மக்களும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் சண்டித்தனம் பேசியது போல கிழக்கு மாகாண கல்வி செயலாளரை பதவியில் இருந்து நீக்கவோ அல்லது ஆளுநருக்கு எதிராக கிழக்கு மாகாண மக்களை திசைத் திருப்பவோ நசீர் அஹமட்டினால் முடியாமல் போனது.
மாறாக ஊடகங்கள் முன்வந்து வீர வசனம் பேசி மூக்குடைப்பட்டதே அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு மீதமானது.
இந்த நிலையில் இவ்விடயத்தை பக்குவமாக கையாண்ட கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் அமைச்சருமான எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான நேரில் சென்று மரியாதை நிமித்தம் சந்தித்து அவருடைய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அதிபர் கலாவுதீனின் வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை அவர் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்து தருமாறும் வினயமாக கோரிக்கை முன் வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையின் நியாயமான தன்மையை புரிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உடனடியாக கிழக்கு மாகாண கல்வி செயலாளரை தொடர்பு கொண்டு குறித்த அதிபரை மனிதாபிமான அடிப்படையில் கல்வி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அதிபராக இடமாற்றம் செய்யுமாறு பணிபப்புரை விடுத்தார்.