Saturday, November 30, 2024

Latest Posts

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் ஜனநாயக உரையாடலுக்கு அச்சுறுத்தல்

அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக இந்த சட்டத்தினை கடுமையாக எதிர்ப்பதாக இணையத்தள ஊடக செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் ஏற்பாட்டாளர் சம்பத் சமரகோன் விடுத்துள்ள அறிக்கையில்,

தனிநபர்களை, விசேடமாக பிள்ளைகளுக்கு இணையவழியில் இடம்பெறும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாக இது சித்தரிக்கப்பட்ட போதிலும், இந்த வரைவானது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் இணையவழி உள்ளடக்கங்கள் மற்றும் கருத்துரைப்புகள் மீது சர்வாதிகாரக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கானதொரு கடுமையான நடவடிக்கையாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.

சட்டவரைவின் ஏற்பாடுகள் விரிவானவையாக தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் சில பகுதிகள் தெளிவற்றதாகவும் தவறாக வழிநடாத்துவதாகவும் காணப்படுகின்ற அதேவேளை, இது நிறைவேற்றதிகாரத்தினை அசௌகரியப்படுத்தும் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்காகவும் தெளிவற்ற சட்டப் போர்வையின் கீழ் முறைகேடாக பயன்படுத்தவும் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதாகவும் அமைகிறது.

தனியார் அல்லது சலுகை பெற்ற தகவல் தொடர்புகள் மீதான ஆக்கிரமிப்பு அதிகரிப்பதனை இயல்பானதாக்கி, இலங்கையின் தற்போதைய அரச கண்காணிப்பு (surveillance) கட்டமைப்பின் மீது இந்த வரைவுச் சட்டத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்படுகிறது. இணையவழிப் பாதுகாப்பு பற்றிய ஆழமான விவாதத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இடம்பெறும் தண்டனையின்மை, வன்முறை மற்றும் கண்காணிப்பு ஆகியவை காரணமாகவும் இன்றளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையைப் பற்றி பேசுவதற்கான அர்த்தமுள்ள ஆலோசனைகள் அல்லது திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினூடாகவும் இடம்பெறுவது யாதெனில் இந்தச் சட்டத்தினூடாக நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கின்ற குறிக்கோள்களின் இயலாமையை சுட்டிக்காட்டுவது மாத்திரமே. வரைவினுள் அதனை அமலாக்கம் செய்வது தொடர்பில் தவறான புரிதல் உள்ளது.

உதாரணமாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடம்பெறக்கூடிய தன்னிச்சையான உத்தரவுகளுக்கு உலகளாவிய மற்றும் முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் இணங்குமென்று எதிர்பார்ப்பது யதார்த்தமானதாக அமையாது. 2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ள மற்றும் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சேவையாற்றும் ஒருங்கிணைந்த பொய்யான நடத்தைகள் (Coordinated Inauthenticated Behaviors) மூலமாக ஏற்படும் உண்மையான தீங்குகளைப் பற்றி இந்த வரைவில் பேசப்படவில்லை. வரைவில் பயன்படுத்தப்படும் மொழியினுடாக விரைவாக மாறிவரும் சிக்கலான ஒருங்கிணைந்த பெய்யான நடத்தைகளின் குணாம்சங்களுடன் செயற்படுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சூழல் சார்ந்த புரிதல் வரைவில் இல்லையென்பது தெளிவாகின்றது.

இலங்கையில் டிஜிட்டல் உரையாடல் தொடர்பில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துமென ஆய்வு செய்யப்பட்டுள்ள சீனா போன்றவற்றிலிருந்து வரும் அழுத்த செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் இந்த வரைவு தோல்வியடைந்துள்ளது. மேலும், இலங்கையின் வரைவுச் சட்டத்தையும் சிங்கப்பூரின் Protection from Online Falsehoods and Manipulation Act எனும் சட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் புத்திஜீவிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக சூழல்களில் காணப்படும் பாரிய வேறுபாடுகளைக் கவனத்திற் கொள்ளாது சட்டம் இயற்றுகின்ற இயலாமை நிலைமையை சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்ற வகையில் சிங்கப்பூர் சட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல் நிலைமையானது, மிக வேகமாக ஜனநாயகத்திற்கு இடமளிக்காது மறுத்துவருகின்ற இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலும் முற்றிலும் பேரழிவையே ஏற்படுத்தும் என்பதாகும்.

முன்மொழியப்பட்ட சட்டமானது ஊடகவியலாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், டிஜிட்டல் படைப்பாளிகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்ற சகல பிரஜைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலாகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வடிவத்திலே இச்சட்டம் நிறைவேற்றப்படுமாயின், இந்தச் சட்டமானது நிச்சயமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து வேறுபாட்டு வெளிப்படுத்தலை அடக்குவதற்கான ஒரு கருவியாகவே மாறும்.

நாம் இந்த வரைவை விவாதத்துற்கிடமின்றி நிராகரிக்கிற அதேவேளை, அது சீர்செய்யப்பட முடியாத குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றே கருதுகின்றோம். எனவே அனைத்து சந்தர்ப்பங்களையும் போல இச்சந்தர்ப்பத்திலும் நாம், இலங்கையின் ஜனநாயக ஆற்றலை முழுமையாக அடைந்துகொள்வதற்காக கோட்பாடுகளைப் பாதுகாத்தவாறு, இணையவழிப் பாதுகாப்பின் பொருட்டு சமநிலையான, பொருத்தமான, அர்த்தப்பாடுடைய, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கத்துடனான அணுகுமுறையை உருவாக்கும் பொருட்டு குரல் கொடுக்க ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.