Saturday, November 23, 2024

Latest Posts

இனிதே நிறைவுற்ற கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் விழா

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர், எழுத்தாளர் ஆதனூர் சோழன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாகத் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி காரை செல்வராஜ், வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் இரா. மன்னர் மன்னன் மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ. பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல்நாள் நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, கொரிய தமிழ்ச்சங்க கலை மற்றும் பண்பாட்டுக் குழு செயலாளர் சரண்யா பாரதிராஜா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் ஸ்ரீப்ரியா ரெங்கநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி இடம்பெற்றது. பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் சங்கப்பொங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரை செல்வராஜ், கொரிய தமிழ்ச் சங்கத்தின் நாட்காட்டியினை சிறப்பாக வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து மற்றோரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இரா. மன்னர் மன்னன், ‘பண்டையத் தமிழர் அறிவியல் ஓர் வரலாற்றுப் பார்வை’ எனும் தலைப்பில் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வரலாற்றுத் தரவுகளோடு கருத்துரை வழங்கி சிறப்பித்தார். பின்னர் கொரிய தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி கேத்தரின் நன்றியுரை வழங்க முதல் நாள் விழா நிறைவுபெற்றது. முதல் நாள் விழாவினை மதுமிதா வீரபாண்டியன் தொகுத்து வழங்கினார்.

இரண்டாம் நாள் நிகழ்வானது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரதாப் சோமசுந்தரம், முதல் நாள் நிகழ்வுகளின் தொகுப்பினைக் கூறி தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து கொரிய தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகள் இணைச் செயலாளர் முனைவர் பத்மநாபன் மோகன், கொரிய தமிழ்ச் சங்கம் பற்றிய அறிமுக உரையினை வாசித்தார். பின்னர் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆதனூர் சோழன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றன. பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் சங்கப்பொங்கல், கலை மற்றும் கவிதை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கோ. பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், ‘அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத்தமிழர்’ எனும் தலைப்பில் தமிழமுதம் பொங்க இலக்கியச் சுவையோடு அன்றைய தமிழரின் வாழ்வியலை எடுத்துக் கூறினார். மேலும் இன்றைய தமிழரின் கடமையாக அகழ்வாராச்சியின் வழியாக உண்மையான தமிழரின் பெருமையினை நிலை நாட்ட வேண்டும் என்று செவிகளும், மனமும் நிறையும்படி சிறப்புரை வழங்கினார். பின்னர் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், கடந்த ஆண்டில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் குறித்து சிறப்பானதொரு தலைமையுரை வழங்கினார். பின்னர் கொரிய தமிழ்ச்சங்கத்தின் தகவல் தொடர்புச் செயலாளர் ஆய்வாளர் சகாய டர்சியூஸ் பீ நன்றியுரை வழங்க, கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா – 2022 நிறைவுபெற்றது.

முன்னதாக, நிகழ்ச்சிக்கான ஏற்படுகளைச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின், கலை மற்றும் பண்பாட்டுக் குழு செயலாளர் திருமதி. சரண்யா பாரதிராஜா, நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன், தகவல் தொடர்புச் செயலாளர் ஆய்வாளர். சகாய டர்சியூஸ் பீ மற்றும் தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.