அமைச்சரவை மாற்றத்தால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

0
116

அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பிரச்சினைகள் தீருமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மின் கட்டணத்தை 100 வீதத்தாலும் 200 வீதத்தாலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ஜனாதிபதி ரணில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது?.

மின் கட்டண அதிகரிப்பால் பண்ட மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும்.

மக்கள் இதற்கு எதிராக வீதிக்கு இறங்கும் போது பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை ஒடுக்க முற்படுகின்றனர்.

ஆனால், அரசாங்கமே சுகபோகங்கள், சலுகைகளை அதிகரித்து கொண்டும், அமைச்சுப் பதவிகளை மாற்றிக் கொண்டும் மக்களை கண்டுகொள்ளாது செயல்படுகிறது.

இன்று அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெற்றது. இதனால் பிரச்சினைகள் தீருமா? இல்லை. அமைச்சுக்களையும், அமைச்சர்களையும் மாற்றி பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுகின்றனர்.

சுகாதார அமைச்சில் நிகழ்ந்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்தும் தரம் குறைந்த மருந்துகள் குறித்தும் முழு நாடுமே கதைத்தது. சுகாதார அமைச்சரை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?.

அமைச்சரவையில் நபர்களை மாற்றி தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்து விவாதம் நடக்கும் போது சுகாதார அமைச்சருக்கு பக்கபலத்தை காட்டும் முகமாக ஜனாதிபதி சபா பீடத்தில் இருந்தார்.

அன்று பாதுகாத்து இன்று மாற்றியுள்ளார்.ஆனால் அவர் செய்த ஊழல் மோசடிகளை மூடி மறைக்க இடமளியோம்.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கூறுகிறார். அவர் என்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரா?.

இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தேர்தல்கள் திணைக்களம் செயற்படும். ஜனாதிபதியின் தேவைக்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய அவசியமொன்றும் இங்கில்லை. அடுத்த வருடம் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை இல்லை. அது நேரத்துக்கு நடக்கும், கள்ளத்தனமாக பிற்போட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு நாம் கோறுகிறோம்.

அரசிலயமைப்பு மீறி நிதி ஒதுக்கீட்டை வழங்காது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here