ஊழலுக்கு எதிரான (திருத்த) சட்டமூலம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் முதலில் ஜூலை 19அன்று வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும், அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் அரசாங்கத்தால் மீள பெறப்பட்டது.
இந்த சட்டமூலம், ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, பல சர்ச்சைகளுக்கும் உள்ளானது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) உட்பட பல தரப்பினர், சட்டமூலத்தின் உட்பிரிவுகள் தொடர்பில் கவலைகளை வெளிப்படுத்தினர்.
சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்த ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் உட்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட மொத்தம் 37 சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தியது.
கருத்துச் சுதந்திரம், மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை பாதிக்கலாம் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா குறித்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.
இதற்கிடையில், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் சமர்ப்பித்தது.
சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், திருத்தங்களுக்குப் பின்னர் இந்த சட்டமூலம் மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
சட்டமூலத்தின் 8 (3), 136, 141, 142 மற்றும் 156 ஆகிய பிரிவுகளில் மனுதாரர்கள் எழுப்பிய பல கவலைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த பின்புலத்தில் இன்று இந்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.