பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று, அந்நிய ஆட்சியைத் தவிர்த்து, தம்மைத்தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகின்றன.
சவால்களை வெற்றிகொள்ளும் வளமான நாளை என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்றன.
பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்களின் வருகை முதலில் இடம்பெற்றது.
அதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் நிகழ்விற்கு வருகை தந்தனர்.
அதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றார்.
தேசியக் கொடி ஏற்றப்பட்டதையடுத்து, பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஜய மங்கள கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதிக்காக முப்படையினரால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி உரையாற்றினார்.
ஜனாதிபதி உரை
நாடு எதிர்கொண்டுள்ள எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
சட்டவாட்சியை பின்பற்றும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில், மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்ததில்லை எனவும் ஜனாபதி குறிப்பிட்டார்.
எவ்வித காரணங்களுக்காகவும் நாட்டில் மீண்டும் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறினார்.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் உரையின் பின்னர் மரியாதை அணிவகுப்பு ஆரம்பமானது.
மரியாதை அணிவகுப்பு
முப்படையின் 319 வீரர்களும் ஏனைய 5,947 வீரர்களும் இம்முறை மரியாதை அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகளும் ஏனைய இராணுவ வீரர்களும் மரியாதை அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.
கடற்படை மற்றும் விமானப்படைகளின் மரியாதை அணிவகுப்பு அதன் பின்னர் இடம்பெற்றது.
விமானப்படையினர் மரியாதை அணிவகுப்பில் ஈடுபடும் போது அவர்களது விமானங்களும் ஹெலிகொப்டர்களும் வானில் சஞ்சரித்தன.
பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் மரியாதை அணிவகுப்பும் இதன்போது இடம்பெற்றது.
முப்படையினரின் யுத்த தாங்கிகளும் மரியாதை அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதுடன் , COVID தடுப்பிற்கான விசேட பிரிவும் மரியாதை அணிவகுப்பில் பங்கேற்றது.
கலை அம்சங்களும் சுதந்திர தின விழாவை அலங்கரித்தன.
எதிர்கட்சித் தலைவர் கலந்துகொள்ளவில்லை
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய சுதந்திர தின நிகழ்வில் இன்று கலந்துகொள்ளவில்லை.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு மத்தியில், அதிக செலவில் நடத்தப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள எவ்வித இணக்கமும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதனிடையே, 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்திராமயவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் கலந்துகொண்டார்.
பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்திராமயவின் விகாராதிபதி , ஸ்ரீ லங்கா ராமாஞ்ய பீடத்தின் மகாநாயக்கர் அக்கமஹாபண்டித, திரிபீடகச்சாரிய, மகுலேவே ஸ்ரீ விமல நாஹிமி தேரரின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக அர்பணிப்புகளை மேற்கொண்ட மஹாமான்ய டீ.எஸ்.சேனாநாயக்க தலைமையிலான தேசிய வீரர்களை நினைவூட்டி, எதிர்க்கட்சித் தலைவரினால் டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டை கட்டியெழுப்ப மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் அவசியம் என எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.