பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி தன்னை கைது செய்து நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தி விளக்கமறியலில் வைத்த காரணத்தால் தனது கௌரவத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 100 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, அதன் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பின்னர் தனியான விசாரணைகளை மேற்கொண்டதுடன், பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே, பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோருக்கு தமக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் ஷானி அபேசேகர தனது மனுவில் தெரிவித்துள்ளார்.