Sunday, January 5, 2025

Latest Posts

துவாரகா வீடியோ நம்பக்கூடிய ஒன்றல்ல – ருத்ரகுமாரன் நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்.

இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவீரர் நாளில் (நவ.27) பிரபாகரனின் மகள் துவாரகா தமிழ் ஒளி என்ற யூ டியூப் சேனலில் காணொலி வாயிலாக பேசுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இப்போரில் பிரபாகரன் மனைவி, மகன்கள், மகள் துவாரகா உயிரிழந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் துவாரகா வீடியோ மீது நம்பகத்தன்மை இல்லை என தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

தமிழீழ தேசிய மாவீரர் நாளில், தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகா பெயரில் வெளிவந்த காணொளியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறோம்.

கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காணொளியில் காட்டுவது வேதனை அளிக்கிறது.

பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் வைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழிப்பே, அரசியலின் முதற்படி என்ற பிரபாகரனின் வார்த்தையை நிலைநிறுத்தி செயல்படுவோம். பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது.

அதே வேளையில் இவ்விவகாரத்தினை பேசும் பொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.