Friday, December 27, 2024

Latest Posts

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: வழிநெடுக வெள்ளமென திரண்ட மக்கள் பிரியாவிடை

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாக்கிழமை (டிச.28) காலை காலமானார். மியாட் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயம்பேட்டில் முழுவதும் கண்ணீர் கடலாக காட்சியளித்தது.

மேலும், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதிச் சடங்குகளுக்குப் பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தின் இருபுறமும் மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ளனர். காவல் துறை பாதுகாப்புடன் மலர்களால் அலங்கரித்த வாகனத்தில் விஜயகாந்தின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வாகனத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலா மற்றும் அவரது மகன்கள் உள்ளனர். மேலும், தீவுத்திடலில் இருந்து ஈவேரா சாலை வழியாக கோயம்பேடு நோக்கி செல்லும் இந்த ஊர்வலத்தில் வழிநெடுங்கிலும் விஜயகாந்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இறுதிச் சடங்குகள் நடைபெறும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் தவிர, பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக இறுதி சடங்கை பொதுமக்கள் காணும் வகையில் எல்.ஈ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள கோயம்பேடு அலுவலகத்துக்குள் செல்ல 200 நபர்களுக்கு மட்டும் 4 நிறங்களில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.