வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது யாழ்ப்பாணத்திற்கு சென்று காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வடக்கின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கான இரு திட்டங்களுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த கொடுப்பனவுகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவானன் சிவபாதசுந்தரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.