வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனங்களை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அகில இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக செவி சாய்க்க வேண்டுமென தாதியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(14) தொடர்கின்றது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தநிலையில், வைத்தியசாலை சேவைகளில் இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.