Friday, January 17, 2025

Latest Posts

மலையக மக்களுக்கு நில உரிமை – கைச்சாத்தானது உடன்படிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டணியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஐக்கிய மக்கள் கூட்டணி” யில் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை இலக்காகக்கொண்டே குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை மற்றும் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோல மலையக தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளதுடன், பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி 10 ஆயிரம் வீட்டு திட்டமும் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக தமிழர்கள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியும் உறுதிப்படுத்தலொன்றை வழங்கியுள்ளது.

அதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு யாருக்கு? இறுதி நேரத்தில் ரணிலிடம் கூட்டணி சரணடையுமா என்றெல்லாம்கூட ஊகங்கள் வெளியிடப்பட்டுவந்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சஜித்துக்கான ஆதரவை கூட்டணி இன்று அதுவும் காதலர் தினத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச,

”எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தப்பட வேண்டும்.

மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு இந்த சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார,சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட சமூத்தை கூலித்தொழிலாளிகளாகவே வைத்திருக்காது அவர்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்குவதோடு, பெருந்தோட்டத் துறையில் பெருந்தோட்ட தொழில் முயற்சியாளர்களாக பணியாற்றும் பெரும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறுவப்பட்ட முதல் நாளிலிருந்தே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் கலந்துரையாடுவதற்கு பதிலாக, இந்த சமூக ஒப்பந்தத்தை நடைமுறை ரீதியாக யதார்த்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். அரசியல் சூழ்ச்சிகளால் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்ட சமூகத்திற்கு எமது கூட்டணி முதன்மையான பணியை ஆற்றும்.” எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனணி தலைவர் வி.இராதாகிருஷ்ணன், சுஜித் சஞ்சய பெரேரா, எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.