இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஷ்வரன் தெரிவிக்கின்றார்.
பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவம் தமக்கு தமக்கு வழங்கியுள்ள தகவல்களில் கேப்பாப்புலவு 59ஆவது பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது மக்களின் காணிகள் குறிப்பிடப்படவில்லை என அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
“என்ன பிரச்சினை என்றால், நான் இங்கிருக்கும் அதிகாரிகளுடன் கதைக்கும்போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் டிசைட் பண்ண இயலாது, நீங்கள் அமைச்சுடன்தான் கதைக்க வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சுடன்தான் கதைக்க வேண்டும். நீங்கள் தரும் மகஜரை அனுப்பலாம். கதைச்சுப் பார்க்கலாம். உங்களுடைய பிரச்சினை எனக்குத் தெரியும். முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த முகாம்கள் அகற்றப்படபோகின்றது என்ற ஒரு லிஸ்ட் தந்திருக்கின்றார்கள். அதற்குள் இது இல்லை. அது இல்லாததுன் பிரச்சினை. படிப்படியாக விடுவிப்பதால் எதிர்காலத்தில் விடுவிப்பார்களோத் தெரியாது. கேட்டு சொல்கிறேன்.”
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி நேற்று (மார்ச் 11) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஷ்வரனிடம் மகஜரை கையளித்தனர்.
மாவட்ட செயலகத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான வேறொருகடிதம் ஒன்றையும் கையளித்தனர்.
பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன்போது பொது மக்கள் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் காணி விடுவிப்பு விடயத்தால் தன்னால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும், பொது மக்களின் கோரிக்கை கடிதங்களை உரிய தரப்பினருக்கு அனுப்பி தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தன்னை சந்தித்த கேப்பாப்புலவு மக்களிடம், மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.
“நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்காககத்தான் நீங்கள் தந்த கடிதத்தை, ஏற்கனவே உங்களது கோரிக்கைகள் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது. பைலில் எல்லாம் இருக்கு. கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. டிசிசி மீட்டிங்கலையும் கதைக்கின்றார்கள். அதற்குரிய ஒழுங்கான பதில் இன்னும் வரவில்லை. இதற்கு நான் பதில் எடுக்க முயற்சிக்கின்றேன்.”
எவ்வாறெனினும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து கடந்த 14 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்திற்கு முன்னர் தமது காணியை விடுவிக்குமாறும் காணியை இழந்து நிற்கும் தெசராஜசிங்கம் புஸ்பராணி குறிப்பிடுகின்றார்.
“எல்லாமே ஏமாற்றமாக, இந்த முறை 2024இலும் நாங்கள் ஏமாறும் மக்களாகவே இருக்கின்றோம். நாங்கள் மாத்திரம், கேப்பாப்புலவு மக்கள் மாத்திரம் இவ்வளவு பாவம் செய்தமா? எத்தனை வருசமாச்சு? பிரச்சினைத் தீர்ந்தும் எத்தனை வருடங்கள் காத்திருக்கின்றோம். இன்னொரு காணியில். ஜனாதிபதி, தலைவர் உண்மையிலேயே நீங்கள் மனம் வைத்து எங்களை விடப்போகின்றீர்கள் என மிகவும் சந்தோசமாக இருந்தோம். ஆனால் 2024இல் எங்களை மிகவும் கவலையான இடத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். அகதிகள் என்ற பெயரில் இருந்து நாங்கள் இன்னும் சிறு துளி கூட மாறவில்லை. எங்களைத் தயவு ஜனாதிபதி தயவு செய்து இவ்வளவு அரசாங்கத்தையே கொண்டு நடத்தும் நீங்கள் இதையும் ஒரு தடவை பார்த்து எங்களுடைய இடத்தை விடுவீர்கள் என புத்தாண்டோடு, நாங்கள் உங்களை நம்பி நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். தயவு செய்து எங்களுடைய காணியை, தாழ்மையுடன் கேட்கின்றோம். விட்டுவிடுங்கோ.”
கேப்பாப்புலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் மேலும் 171 ஏக்கர் பொது மக்களின் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணிக்குள் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட பொது கட்டிடங்களும் பொது மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான தோட்டக் காணிகளும் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.