அரசாங்கம் வழங்கும் நிதியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உரிய0முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மக்களுக்காக அமுல்படுத்தப்படும் “அவஸ்வெசும” “உருமய” மற்றும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் “கதுர தசாப்தம்” வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு தீவிரமாக பங்களிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்த அனைத்து வேலைத்திட்டங்களின் நன்மைகளும் மேலும் சேர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கொழும்பில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சவிமடத்தின் எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.