எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் சிரேஷ்டர்கள் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் ஹக்மனையில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற DP Education IT Campus சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா மற்றும் கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் மதிய உணவுக்காக காமினி செனரத்தின் வீட்டிற்குச் சென்றதுடன், சிறிது நேரம் கழித்து பொஹொட்டுவே தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளும் அங்கு வந்துள்ளனர்.
அதன்படி அங்கு இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பொஹொட்டுவவில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பொஹொட்டுவவில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.