தமிழீழ விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பாகவும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவும் இந்தியா மீளவும் பிரகடனம் செய்துள்ளது.
இந்திய மத்திய உள்துறை அமைச்சு 5 வருடங்களுக்கு தடை உத்தரவினை நீடித்து அறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையைத் தளமாகக் கொண்டுள்ள போதிலும் அதன் ஆதரவாளர்களும் அபிமானிகளும் முகவர்களும் இந்தியாவிலும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் இறைமைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடை செய்யும் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் முதலாம், மூன்றாம் உப பிரிவுகளினால் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய, விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசாங்கம் 2019 மே 14 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்தது.
அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான அறிவித்தலை இந்திய மத்திய உள்துறை அமைச்சு இன்று வௌியிட்டுள்ளது.