Wednesday, November 27, 2024

Latest Posts

மலையகத்தில் ‘1700’ ரூபா அரசியல் – ராமேஷ்வரன் கவலை

“கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக செய்துவருகின்றார். அதனால்தான் இன்று எல்லா துறைகளிலும் எமது சமூகத்தினர் பிரகாசித்துவருகின்றனர் என – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து (04.09.2024) அன்று பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷா சிவராஜா, உப தலைவர் பிலிப், பொகவந்தலாவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் அஸ்வெசும வந்தபோது எமது மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என எமது அமைச்சர் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். இதனையடுத்து எமது மக்களும் உள்வாங்கப்பட்டனர். அதுமட்டுமல்ல காணி உரிமை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எமது மலையகத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகின்றார். எனவேதான் மக்கள் பக்கம் நின்று நாம் அவரை ஆதரிக்கின்றோம். அதுமட்டுமல்ல நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே அவர் உறுதிமொழியாக வழங்கிவருகின்றார். ஆனால் சில வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக முடியாதவிடயங்களையெல்லாம் கூறுகின்றனர். ஏனெனில் தேர்தலின் பின்னர் அவர்கள் காணாமல்போய்விடுவார்கள்.

தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை. தொழிலாளர்களின் நலனே எமக்கு முக்கியம். எனவே, ஆயிரத்து 700 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்

ஆயிரத்து 700 ரூபாவுக்கு என்னாச்சி என சிலர் கேட்கின்றனர். ஆனால் நல்லாட்சியின்போது அத்தரப்பினரால் 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடிந்ததா? இல்லை. நாம் வந்த பிறகுதான் ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது. தற்போது அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.

இது தேர்தல் காலம் என்பதால், வாக்குகளைப் பெறுவதற்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது. அவ்வாறு செய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும். தேர்தலுக்காக எமது மக்களை பணயம் வைப்பதற்கு நாம் தயாரில்லை. வழங்கிய வாக்குறுதிபோல நிச்சயம் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுப்போம். சிலருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறெதுவும் இல்லை. அதனால்தான் ஆயிரத்து 700 ரூபாவை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளராக்கப்படுவார்கள் என ஒருவர் உறுதியளித்தார். அதே அணியில் உள்ள ஒருவர் அது அப்பட்டமான பொய் எனக் கூறுகின்றார். இவர்களின் வாக்குறுதிகளின் இப்படிதான் அமையப்போகின்றது.

எனவே, மீண்டும் வரிசை யுகம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், எமது மக்களின் வாழ்வு மேம்படுவதற்காகவும் செப்டமப்ர் 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்போம். ” -என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.