“நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும்.”
- இவ்வாறு இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மலையக மக்களுக்கு வாக்குறுதி பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை மக்கள் மறக்கக்கூடாது. மலையக மக்களின் வீட்டுத் திட்டங்கள், சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, கல்வியல் கல்லூரிகள் என்று பல சேவைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார். 1700 ரூபா சம்பள அதிகரிப்பையும் ஜனாதிபதி உறுதி செய்வார் என்று நம்புகின்றோம்.
மலையகத்தின் தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்றிணைத்துள்ளார். எனவே, நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்போம்.
அன்று கொன்று தள்ளிய தோட்ட அதிகாரிகளையும், தீயிட்டுக் கொளுத்திய தொழிற்சாலைகளையும், மக்களின் அடையாள அட்டைகளையும் அவர்களால் பெற்றுத்தர முடியுமா?” – என்றும் வடிவேல் சுரேஷ் வினவினார்.