வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பைஒத்திவைக்கக் கோரி மனுத் தாக்கல்

0
165

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்குமாறு கோரி ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே உயர்நீதிமன்றத்தல் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட வேட்பாளர் ப.உதயராசா மற்றும் மூவரால் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தாம் வன்னி மாவட்டத்துக்காக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வேட்புமனுவைக் கையளித்தனர் என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த வேட்புமனு முறையாக முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு அதனை ஏற்றுக்கொள்வதை அவர் நிராகரித்தார் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து ஆவணங்களும் முறையாக முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்பதால் அந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக்கும் ரிட் எழுத்தாணையை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை வன்னி மாவட்டத்துக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பை இடைநிறுத்தும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here