Friday, November 29, 2024

Latest Posts

‘வௌ்ளை யானைகள்’ என கூறும் திட்டங்கள் குறித்து சீனா விளக்கம்

சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என தூதுவர் தெரிவித்தார்.

உதாரணமாக தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள தாமரை கோபுரத் திட்டம் தற்போது இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளதுடன், அது இலங்கையின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா முதலீடு செய்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முழுக்க முழுக்க சீனாவின் முதலீடு என்று சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கையினால் எந்தப் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சிலர் சீனக் கடன்கள் மற்றும் முதலீடுகளை, கடன் பொறி என்று கூறினாலும், அந்த முதலீடுகள் இலங்கையுடனான வலுவான நட்புறவின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திர நாடாக எழுந்து நிற்க இலங்கைக்கு சீனா நிதியுதவி வழங்கியதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் சீன-இலங்கை உறவுகள் புதிய அத்தியாயத்தில் பிரவேசிக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் ஏன் கைச்சாத்திடப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த அவர், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை சந்தையை சீனா ஆக்கிரமிக்கும் என்ற தவறான அச்சம் நிலவுவதாக தெரிவித்தார். .

சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், ஒரு வருடத்தின் பின்னர் பாதகமான விடயங்கள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சீனத் தூதுவர் சி ஜான்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் , கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதேபோன்று எதிர்காலத்திலும் சீனா இலங்கைக்கு உண்மையான நண்பனாக ஆதரிக்கும் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.